முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும் கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தமிழீழம் மட்டக்களப்பிலும் சிறிலங்காவிலும் தற்கொலைத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்குமான வணக்க நிகழ்வும் பிரான்சு பரிசுக்கு அண்மையில் உள்ள பொண்டி நகரத்தின் மாநகரசபை முன்றிலில் 08.06.2019 புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயற்பாட்டாளர் கஜன் அவர்களின் முயற்சியினால் தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் அடங்கிய புகைப்படங்களும் பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொண்டி மாநகரசபையின் நகரபிதா திருமதி சில்வின் தொமசின் அவர்களும் துணைநகர பிதா திரு. சார்லி நாபால் ஆகியோர் கொட்டும் மழைக்கு மத்தியில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்ததுடன், சுடர் ஏற்றி மலர்வணக்கமும் செலுத்தியிருந்தனர். இவர்களுடன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு.சுரேஸ் மற்றும் செயற்பாட்டாளர்கள், பொண்டி தமிழ்ச்சங்கப்பொறுப்பாளர் திரு.கலைச்செல்வன் மற்றும் செயற்பாட்டாளர்கள், பொண்டி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். நிறைவாக பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் தெரிவிக்கையில், அசாதாரண காலநிலைக்கு மத்தியிலும் வருகைதந்து சிறப்பித்திருந்த பொண்டி நகரபிதா, துணைநகர பிதா ஆகியோருக்கு நன்றியறிதலைத் தெரிவித்திருந்ததுடன், தொடர்ச்சியாக இவ்வாறான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒவ்வொரு மாநகர சபை முன்றில்களில் நடாத்தவுள்ளதாகவும் அதற்கு மக்கள் முன்வந்து தமது ஆதரவுகளை வெளிப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்தோடு வரும் மே 18 அன்று நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப்பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)