இராணுவ சீருடையைப் பிரதிபலிக்கும் ஒத்த வடிவங்களில் அமைந்த ஆடைகளையோ துணிகளையோ விற்பனை செய்ய வேண்டாம் என ஆடைவிற்பனையாளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஏறாவூர் நகர வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இது விடயமாக பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஏற்கெனவே தங்களால் விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள கையிருப்பின் மீதமுள்ள அளவின் விவரங்களைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
அதற்கான விவரம் சேகரிக்கும் படிவங்கள் ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத்தினால் புடவைக் கடை வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மறு அறிவுறுத்தல் வரும் வரை தங்கள் கைவசமுள்ள இராணுவ சீருடை வடிவில் அமைந்த அல்லது அதனைப் பிரதிபலிக்கும் நிறங்கள் அலங்காரங்கள் கொண்ட ஆடைகளையும் துணிகளையும் விற்பனை செய்யாது அவற்றை தம்வசம் வைத்திருக்குமாறும் சோதனை நடவடிக்கைகளின்போது பொலிஸாருக்குத் தெரியப்படுத்தி கையிருப்பைக் காண்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை காரணமாகவே இந்தவித கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுபதற்கு முன்னர் புடவை விற்பனையில் இத்தகைய கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் இல்லாதிருந்ததால் தாங்கள் இவற்றை விற்பனைக்காக கொள்வனவு செய்துவிட்டிருந்ததாககத் தெரிவிக்கும் புடைவைக் கடை வர்த்தகர்கள், தற்போதைய நெருக்கடி நிலைமை தங்களுக்கு பாரிய வர்த்தக இழப்புக்களை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.