சமகாலத்தில் இடம்பெற்றுவரும் ஈழத்தேசிய அரசியல் போக்குகளை மனதிற்கொண்டு ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட, ‘மாற்றத்திற்கான குரல்’ என்ற செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கு இம்மாதம் 18ஆம் நாள் சனிக்கிழமை Kingston பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அடிப்படைக் கருத்தாக்கத்தில் ஒத்த கருத்துடைய பலர் ஒன்றுகூடி இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர்.
மாலை 7 மணியளவில் ஆரம்பமான இக்கருத்தரங்கத்தில் முதலில் மாற்றத்திற்கான குரல் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, கனடாவிலிருந்து வந்திருந்த திரு பீற்றர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாற்றத்தின் குரல் செயற்றிட்டம் உருவாக்கப்பட்ட நோக்கம், முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அவர் உரையாற்றினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அறவழி அரசியற் தொடர்ச்சியின் போக்குகளும் நோக்கங்களும் தடம் மாறிச் செல்வதாகப் பலரும் கூற ஆரம்பித்திருக்கின்ற நிலையில் தமிழ் அரசியற் தலைமையைத் தமிழர் நலன் சார்ந்து வழிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே மாற்றத்தின் குரல் செயற்றிட்டம் என திரு பீற்றர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியத்தின் நலன் சார்ந்து முழுமையாகச் செயற்படவல்ல உறுதியான தலைமையை உருவாக்குவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முரண் போக்கினைச் சுட்டிக்காட்டி, இனநலன் சார்ந்து நெறிப்படுத்த முடியும் எனத் தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிபணிவு அரசியல் சிந்தனைத் தளங்களில் இருந்து மாறுபட்டு புதிய மாற்றங்களின் குரலாக ஒலிக்கவும், இனச்சிக்கலுக்கான அடிப்படைத் தேடலிலிருந்து விலகாமல் தேசிய, அனைத்துலக அரங்குகளில் வலுவாக ஒலிக்கவும், திடமாக முடிவெடுக்கவும் வல்ல தலைமையை இனங்கண்டு ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி மூத்த ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான திரு ஜோதிலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை காணொலியாகக் காண்பிக்கப்பட்டது.
மேலும், சிங்கப்பூரில் சிறீலங்கா சார்பாளர்களுக்கும் சிறீலங்கா அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் தரப்பு சார்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக ஊடகவியலாளர் திரு கோபி ரட்ணம் அவர்கள் விரிவாக விளக்கம் கொடுத்தார்.
தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற இன இருப்பின் அடிப்படைகளில் இருந்து விலகாது பயணிக்கும் இக்கட்சியின் அடிப்படை வரைபுகளையும் பேரங்களுக்கு விலை போகாத ஆளுமையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னரே மாற்றத்தின் குரல் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்க முடிவு செய்தனர் என்பதை இதன்போது திரு கோபி ரட்ணம் அவர்கள் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அக்கட்சியின் செயலாளர் திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் ஆற்றிய உரை காணொலியில் காண்பிக்கப்பட்டது. தாயகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பாகவும் தாயக மக்கள், போராளிகள் ஆகியோர் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் திரு அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார். ஈழத்தமிழர்கள் தமக்கான தீர்வை வென்றெடுக்கக் கூடிய வகையில் தெளிவோடும் உறுதியோடும் செயற்படும் மாற்று அரசியற் தலைமையினைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.
நிறைவாக மாற்றத்திற்கான குரல் செயற்றிட்டக்குழுவைச் சேர்ந்த பிரித்தானிய ஒருங்கிணைப்பாளர் திரு பாலசுகுமார் அவர்கள் மாற்றத்தை உருவாக்கத் தொடர்ந்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றினார்.
கேள்வி நேரத்தின் போது மாற்றத்திற்கான குரல் செயற்றிட்டம் தொடர்பாகக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மக்கள் கேட்ட கேள்விகளுக்கான உரிய பதில்களும் வழங்கப்பட்டன.
இரவு 9:30 அளவில் இக்கருத்தரங்கு நிறைவு பெற்றது.