தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன.
தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றது என அத்துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னாள் போராளிகளின் உதவியை 512 படைகளின் தளபதி கேட்டிருப்பது படையினரின் புலனாய்வுத் துறையின் இயலாத்தன்மையை வெளிக்காட்டுகின்றது எனவும் முன்னாள் போராளிகளிடம் பிச்சை எடுப்பது போல உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத் துறை மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளையும் தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளும் நோக்குடன் இது நடைபெற்றிருக்கலாம் என கிளிநொச்சி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், அதைக் குழப்புவதற்கான உத்தியாக இது இருக்கலாம் எனவும் தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரும் ஓட்டுக்குழுக்களும் இதுபோன்ற பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மக்களையும் முன்னாள் போராளிகளையும் சங்கடங்களுக்கு உள்ளாக்கியதையும் கிளிநொச்சி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.