முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்களும் சென்றுள்ளனர்.
ஏற்கனவே குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிற நிலையில், சட்ட விரோதமான முறையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள், நில அளவையாளரிடம் சூழ்நிலை பற்றி தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
எனினும், அவர்கள் நில அளவீடு செய்ய மீண்டும்ட முயற்சித்துள்ளனர். இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் காணிகளை தங்களின் காணி என்று கூறிக்கொண்டு பல சிங்கள மக்களும் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அதேவேளை தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தரும் அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சிங்கள மக்கள் அந்தக் காணிகள் தங்களுடையது என்று கூற, தமிழ் மக்களும் ரவிகரனும் காணி ஆவணங்களை முன்னிறுத்தி அங்கிருந்தோர் முன்னிலையில் வாதாட ஒரு முறுகல் நிலை தோன்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நில அளவையாளர்களும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தரும் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர். நேற்று முற்பகல் நிகழ்ந்த இச்சம்பவத்தால் கொக்கிளாய் பகுதியில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.