இன்று மே 1 ஆம் நாள் , தொழிலாளர் நாளில், பரிசில் வன்முறைகள் அதிகளவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்புக்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக பரிசுக்குள் 3,000 காவல்துறை மற்றும் ஜோந்தாமினர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் Christophe Castaner இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, பரிசுக்குள் இன்று 7,400 CRS அதிகாரிகள் மற்றும் ஜோந்தாமினர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “பரிசை பொறுத்தவரையில் அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது” என Christophe Castaner தனது செவ்வியில் குறிப்பிட்டார். <<இது உழைப்பாளர்களுக்கான தினம். வன்முறையாளர்களுக்கானது அல்ல!>> என தெரிவித்த உள்துறை அமைச்சர், வன்முறையாளர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இன்று காலை 6:30 மணியில் இருந்து பரிசுக்குள் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், குறிப்பாக தொடரூந்து நிலையங்கள் அதிகளவு பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 இடங்களில் காவல்துறையினர் பரிசுக்குள் ‘தடுப்பு மற்றும் சோதனை’ நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.