படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரட்ணம் சிவராமின் 14ம் ஆண்டு நினைவு நாளும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று (29) மாலை 3.30 மணியளவில் யாழ். நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் நினைவுரைகளும் இடம்பெற்றன.