இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் கட்டுரைகளை எழுதிய நிலையில், அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டதுடன், 1990களின் இறுதிப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டவராகி, விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வழங்கும் என்று தனது எழுத்துக்களில் எழுதினார்.
தமிழ்த் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்ததுடன், அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்குதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாளர்கள் மற்றும் அரசசார்பு கூட்டு செயற்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய பங்குகளுக்காக அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் “மாமனிதர்” என்ற விருது வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கடந்தபோதிலும், இதுவரையில் சிவராம் உட்பட சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.