”தகிக்கும் தண்ணீர்” எம் மண்ணின் சமகால கதை , ரத்னம் தயாபரன் மற்றும் அருந்தவநாயகம் பகீரதன் ஆகியோரின் தாயாரிப்பில் கிருஷ்னாவின் குரல் ஒலி சேர்க்கையில் ஊடகவியலாளர் ஜெராவின் எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு நெறியாள்கையில் வெளிவந்திருக்கிறது.
ஜெரா, சிறந்த பத்தி எழுத்தாளர் துணிச்சலான ஊடகவியலாளர் , தனது எழுத்துக்களால் அண்மைக்காலங்களில் சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகளை யாருக்கும் அஞ்சாமல் நச்சென சொல்லுபவர் , புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து நீதி கேக்கவைக்கும் அளவுக்கு அவரின் எழுத்துக்கள் வலிமை வாய்ந்தவை. இவரின் முதலாவது ஆவணப்படம் ஈழத்தின் மூத்தவரை நாம் அறியவும் , காணவும் வைத்தது. தான் வாழும் மக்கள் கூட்டத்தின் மீது வைத்திருக்கும் பாசத்தின் , பற்றின் அக்கறையின் வெளிப்பாடாக , காலத்துக்கு தேவையான தேசத்தின் கடமையாக தகிக்கும் தண்ணீரை படைத்திருக்கிறார். 34 நிமிடங்கள் 20 வினாடிகள் உள்ள இப்படத்தில் தேவை இல்லை என்று சொல்லக்கூடிய எந்த நிமிடங்களும் இல்லை. அறிமுகம் பண்பாட்டு வரலாற்று ரீதியாக மட்டுமல்லாது.
புவிசார் அரசியல் மற்றும் இராணுவ கேந்திர முக்கியத்துவத்தையும் சொல்லி செல்வது இதற்க்கு தான் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் நில அபகரிப்பு சதிகள் நடைபெற்றன , நடைபெறுகின்றன ,என்பதை சூசகமாக சொல்லி செல்கிறது. இதனைவிட
* சுன்னாகம் நீர் பிரச்சனை தொடர்பாக ஆரம்பம் முதல் இற்றை வரையான தெளிவான ஒரு விளக்கத்தை புரிந்துகொள்ளலை ஏற்படுத்துகிறது.
*பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நேரடி வாக்கு மூலம் அந்த மக்களின் குரலாக , ஏக்கமாக , எதிர்கால சந்ததி தொடர்பான வலியாக ஒலிக்கிறது.
*துறை சார்ந்தவர்களின் மருத்துவர் , பேராசிரியர் , உளவியல் நிபுணர் , ஊடகவியலாளர் சட்டத்தரணி போன்றோரின் தகவல்கள் பெருமதியானவையாக இருக்கின்றன.
*நீர் மாசு ஏற்படுத்தக்கூடிய , சுகாதார , உளவியல் , பிரச்சனைகளை சொல்வதோடு , பண்பாட்டுகூருகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் கூறுகிறது, அத்தோடு ஒரு சுழற்சியாக அன்றாட வாழ்வை முழுமையாக எப்படி பாதிக்கும் என்பதையும் நீண்ட காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் எதிர்வு கூறுகிறது.
* சுன்னாகம் நீர் மாசு தொடர்பாக நிகழ் கால சம்பவங்களை பதிவு செய்கிறது.
* பொறுப்பு கூற வேண்டியவர்களை மக்களின் குரலாக கேள்வியும் கேக்கிறது.
*களத்தில் இருந்து உண்மையை உரைக்கிறது.
*கட்சி அரசியல் இல்லாமல் இனத்துக்காக வந்திருக்கும் ஆவணம்.
ஒட்டுமொத்தத்தில் அந்த மக்கள் இப்பிரச்சனையால் எப்படி சிதைக்கப்பட்டிருக்கிரார்கள் என்பதையும் காட்டி நிற்கிறது. உண்மையில் 1940 களிலேயே சர்வதேச ஆய்வாளர்களால் யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீர் தொடர்பாக எதிர்வு கூறலும் , அதன் தட்டுப்பாட்டால் பாலைவனமாகும் என்றும் எச்சரித்து இருக்கிறார்கள். இந்த எச்சரிப்புகளுக்கு மத்தியில் இப்படியான பாரிய அனர்த்தம் ஏற்படுத்தப்பட்டமை இன அழிப்புக்கான அல்லது இன சுத்திகரிப்புக்கான திட்டமிடப்பட்ட செயலோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. என்னடா எதற்கு எடுத்தாலும் இன அழிப்பு என்கிறார்களே என்று நினைத்திட கூடாது காரணம் , isis போல கழுத்தை வெட்டுவதோ அல்லது கொத்து கொத்தாக கொன்று குவிப்பதோ மட்டும் இன அழிப்பு ஆகாது நீண்ட காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய அடிப்படையில் ஒரு இனத்தை இலக்கு வைத்து நடத்தக்கூடிய நுணுக்கமான நடவடிக்கைகளும் இன அழிப்புக்கான செயற்பாடுகள்தான். அப்படிப்பார்த்தால் இது எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான ஒரு படைப்பு , ஆவணம் ஆகும்.
இது இப்படி இருக்க இதன் இயக்குனர் இப்படி ஒரு பதிவை தனது முகப்புத்தக சுவற்றில் பதிவிட்டிருக்கிறார் “யாழ்ப்பாணத்தின் 99 வீதமான ஊடகவியலாளர்களும், 100 வீதமான அச்சு ஊடகங்களும் புறக்கணித்த படம் இதுதான். அந்த புறக்கணிப்பிற்கு நான் அறிந்த காரணம், இந்தப்படம் வடக்கு மாகாண சபைக்கு எதிரானது என்பதுதான். நன்றி நண்பர்களே, படத்தின் செய்தி மக்களிடம் சென்றுவிட்டது…!
இப்பதிவு பல அரசியல் அழுத்தங்கள் , தடைகளை தாண்டி வெளி வந்திருப்பதை உணர்த்துகிறது அப்படி என்ன விடயம் வடமாகாண சபைக்கு எதிராக இருக்கிறது, ஏற்றுகொள்ளமுடியாத வடமாகானசபைக்கு எதிரான விமர்சனம் என்று ஒன்று கூட இல்லாத பட்சத்தில் எதற்காக இந்த நிலை , ஒரு பொறுப்புள்ள ஊடகவியலாளனாக சமூகத்தின் முக்கிய பிரச்சனையை தட்டி கேட்பது , அதனை பதிவு செய்வது எந்த விதத்தில் தவறாகி விடும். ஜெரா இதை தவிர வேறு எதையும் இந்த ஆவணத்தில் செய்யவில்லை.
தமிழ் தேசியம் என்பது உள்ளக ஜனநாயகத்தின் மீது கட்டி எழுப்பப்படவேண்டிய ஒன்று , அதை வளர்த்து கொள்வதன் ஊடாகத்தான் ஒத்த திசையில் பயணிக்க முடியும்
இப்படம் மக்களை சென்றடைய வேண்டும், புலம்பெயர் தேசத்தில் வாழும் சமூக செயற்பாட்டாளர்கள் தத்தம் நாடுகளில் இதனை திரையிட்டு கலந்துரையாடல்களை ஏற்படுத்திகொள்ளவேண்டும். சனத்தை காப்பாற்றினால் தான் இனம் இருக்க முடியும்.