சிறீலங்கா தேசத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரான்சில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு!

0
426

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லாக்கூர்னோவ் மாநகர முதல்வர் அவர்களின் ஏற்பாட்டில் மாநகரசபை மண்டபத்தில் 24.04.2019. புதன்கிழமை மாலை 18.00 மணிக்கு சிறீலங்கா தேசத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

கிறிஸ்தவ மக்களின் புனிதநாளாகக் கருதப்படும் ஈஸ்ரர் பண்டிகை நாளில் தமிழீழ தேசத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலும், சிறீலங்கா தேசத்தின் தலைநகர் கொழும்பு நகரிலும் தமிழர்களைக் குறிவைத்து தாக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 360 பேருக்கு மேல் உயிர்நீத்தும், 500 பேருக்கு மேல் காயப்பட்டு இன்னும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சர்வதேசம் எங்கும் இந்த சம்பவத்தையிட்டு இறந்த உயிர்களுக்கான வழிபாடுகளும், கண்டன அறிக்கைகளையும், ஒன்றுகூடல்களையும் நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரான்சு நாட்டில் தமிழ்மக்கள் அதிகம் வாழும் ஒரு நகரமாக இருக்கும் லாக்கூர்னோவ் மதிப்புக்குரிய முதல்வர் Gilles Poux அவர்களும், 93 ஆம் மாவட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரான்சு பாராளு மன்றத்தில் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் தலைவியுமாகிய Marie Georg BUFFET அவர்களும் மற்றும் தமிழின உணர்வாளர் Antony Rusel அவர்களும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் உரையில், நடைபெற்ற இந்த தாக்குதல் உயிர் இழப்பும், அனைத்து மொழியினரும், இனத்தினரும், மதத்தினரும் இறந்துள்ளது அதிகம். தனது பகுதியில் வாழும் தமிழ்மக்கள் தமிழ்இனம் இறந்து போனது மிகுந்த வேதனையை அளிக்கின்றது என்றும் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் ஒற்றுமை வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தமிழர் தரப்பில் உரையாற்றியவர்கள் நாம் கடந்த 71 வருடங்களாக இந்த துன்பத்தையும், வேதனையையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றதையும், எமது தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலை அதிகம் என்றும் தற்பொழுது நடந்த இந்த கொடூரத் தாக்குதலுக்கு பின் தான் சர்வதேசம் தமிழர்களின் நியாயத்தை சற்று கண் திறந்து பார்க்கின்றது. பகிரங்கமாக ஊடகங்கள் கூறுகின்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை விழிகளை நன்றாகத் திறந்து சர்வதேசம் பார்க்க வேண்டும். அதைநோக்கிய தமிழர்களின் நியாயமான பரப்புரைகளும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்தும் பிரான்சின் பல இடங்களின் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டங்களும் வணக்க நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 27ஆம் நாள்( சனிக்கிழமை) சார்சல் பிரதேசத்திலும், 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை) பாரிசின் மடலின் தேவாலயம் முன்பாக 11.00 மணிக்கும், 29 ஆம் நாள் ( திங்கட்கிழமை ) 15.00 மணிக்கு வெர்சே மாநகரத்திலும் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here