ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் தீவிரவாதிகள் நடத்திய 4 தாக்குதல்களில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பலியாயினர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் தலா 72, 71 சதவீத வாக்குகள் பதிவாயின. இது மாநிலத் தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்சமாகும். மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
ஜனநாயகத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் ராணுவ முகாம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், ராணுவத்தை தாக்கிய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால், எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 4 முறை தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.
முதல் அட்டாக்: நேற்று அதிகாலை 3.10 மணிக்கு வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பொஹ்ரா அருகே உள்ள ஊரி ராணுவ முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. இதில், ஒரு ராணுவ மூத்த அதிகாரி, 7 பாதுகாப்பு படை வீரர்கள், 3 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ராணுவத்தை தாக்கிய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 6 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 55 புத்தகங்கள், 2 அதிநவீன துப்பாக்கிகள், இரவிலும் தெளிவாக காணக்கூடிய 2 பைனாகுலர்கள், 4 ரேடியோ, 32 கையெறி குண்டுகள், மருத்துவ உதவிப் பெட்டி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 7வது தீவிரவாதி: அதைத் தொடர்ந்து சவுரா புறநகர் பகுதியில் இருந்து, நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த 2 தீவிரவாதிகள் முயற்சி செய்தனர். அவர்கள் வந்த கார், சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றதை தொடர்ந்து, பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், லஷ்கர்இதொய்பாவின் முக்கிய தளபதி காரி இஸ்ரார் கொல்லப்பட்டார். இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். மற்றொரு தீவிரவாதி தப்பியோடியதாக கூறப்படுகிறது.
3வது தாக்குதல்: இதனை தொடர்ந்து, டோடா பகுதியில் இருந்து சோபியானுக்கு வந்த தீவிரவாதிகள், கையெறி குண்டுகளை காவல்நிலையத்தின் மீது வீசி அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 4வது தாக்குதல்: தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் அதிகளவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வாகனத்தின் மீது வீசினர். இதில் அப்பகுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இதற்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானுக்கு கண்டனம்: தீவிரவாத தாக்குதல் குறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், “தேர்தல் நடைபெறும் சமயத்தில், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்கும். ஸ்ரீநகருக்குள் ஊடுருவ முயன்றுள்ள மற்ற தீவிரவாதிகளையும் நாங்கள் விரட்டியடிப்போம். காஷ்மீரில் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணித்து, ராணுவத்தினர் விரட்டியடித்து வருகின்றனர். சமீபத்தில் கொடுக்கப்பட்ட பதிலடிகள், ராணுவத்தின் கை ஓங்கியிருப்பதை காட்டுகிறது’’ என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “இதுபோன்ற நாச வேலைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், பாகிஸ்தான் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும். எல்லை தாண்டிய ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகள் தான் இங்கு நாசவேலைகளை செய்கிறார்கள்“ என்றார்.
ராணுவம் உஷார்: வரும் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீநகரில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தீவிரவாதிகள் ஸ்ரீநகருக்குள் நுழைய முயற்சித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, வேறு ஏதேனும் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்களா என்ற கோணத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம், போலீசார், எல்லைப் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்:
டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதிகரித்து வரும் நம்பிக்கையும், நல்லெண்ணமும் நிறைந்த சூழலை சீர்குலைக்க, விரக்தி அடைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்த, வீரம் மிக்க ராணுவ வீரர்களுக்கு 125 கோடி இந்தியர்களும் தலை வணங்குகிறார்கள். அவர்கள் நாட்டுக்காக வாழ்ந்தார்கள். நாட்டுக்காகவே உயிரிழந்தார்கள். அவர்களை நாம் மறக்க மாட்டோம். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.