சமூக ஒருங்கிணைப்பையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் இறையருள் நிறைந்த இடங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கவலையடைவதாக இந்து குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் அமைதியையும் சமாதானத்தினையும் சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது எனவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இந்து குருமார் அமைப்பு வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைத்து ஆத்மாக்களும் சாந்தி பெறுவதற்காக பிரார்த்திப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களின் போது, இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமைதியுடனும் ஒற்றுமையுடனும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.