கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாழைச்சேனை தமிழ் பிரதேசங்களில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்வு, வாழைச்சேனை பொது மக்களின் ஏற்பாட்டில் பிரதான சந்தையில் இடம்பெற்றது.
இதன்போது சர்வதமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தேசிய துக்க தினமான இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 8.33 மணி வரையிலான 3 நிமிடங்கள் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வஞ்சலி நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து வாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கம், வாழைச்சேனை பொது அமைப்புக்கள், வாழைச்சேனை தமிழ் ஆட்டோ சங்கத்தினர், விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி தமிழ், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு வெள்ளைக் கொடி கட்டப்பட்டு காணப்படுகின்றது. அத்தோடு போக்குவரத்து நடைபெற்ற போதிலும் பொதுக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.