தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு, ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (21.04.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஓள்னே சுபுவா தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களின் குடும்பத்தினர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் ஒள்னே சுபுவா மாநகர துணைநகரபிதா திரு.எறிக் பௌலோ, முதலாம் துணைநகரபிதா திருவாட்டி செவெரின் மறோன் ஆகியோர் கலந்துகொண்டு தமது உணர்வைப் பகிர்ந்து கொண்டதுடன், இலங்கையில் இடம்பெற்ற கொடுமையான சம்பவம் குறித்தும் தமது கவலையைத் தெரிவித்துக்கொண்டனர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. செவ்ரோன் தமிழ்ச்சோலை, ஓள்னே சுபுவா தமிழ்ச் சோலை 1, ஓள்னே சுபுவா தமிழ்ச் சோலை 2, செல் தமிழ்ச்சோலை, ஆகிய பாடசாலை மாணவிகளின், எழுச்சி நடனங்கள், வில்பந் தமிழ்ச்சோலை சிறுமிகளின் அன்னை பூபதி தொடர்பான உரைநடை, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி ஜெனனி ஜெகதாஸ் அவர்களின் பேச்சு, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி யசோதா எட்வேட் அவர்களின் கவிதை செல்வி சோதிராசா சோனா அவர்களின் கரோக்கி இசையுடனான மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் என்பன அரங்கை அலங்கரித்தன. நிகழ்வில் நினைவுரைகளை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திரு. தசரதன் ஆகியோர் ஆற்றியிருந்தனர். நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)