சுவிசிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வந்து, இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை – பேர்ண் நகரில் கியோஸ்க் வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த நடராசரின் கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இரு குழந்தைகளில் ஒருவர் காயமுற்றதாகவும் ஒருவர் எதுவித காயமும் ஏற்படாமல் இருவரும் நலமாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பிள்ளைகள் காயம்பட்டு அம்மாவையும் அப்பாவையும் கண்முன்னே பலிகொடுக்கும் கொடுமை யாருக்கும் வரக்கூடாது !
ஈஸ்ரர் விடுமுறைக்கு தனது கியோஸ்க் எனும் மிக நல்ல நிலையில் இயங்கிவந்த சிறு வியாபார நிலையத்தை விடுமுறை வாரம் என தனது வாடிக்கையாளர்களுக்கு டொச் மொழியில் எழுதி ஒட்டிவிட்டு சென்றிருந்தனர் இத்தம்பதியினர்.
புன்சிரிப்பை மட்டும் வழங்கி அதிர்ந்துகூடப் பேசத்தெரியாத இத்தம்பதியினர்க்கு இப்படியோர் அவலச்சாவு என்பது அவர்களோடு பழகிய சுவிஸ்வாழ் தமிழ்மக்களுக்கு ஜீரணிக்க முடியாத தொன்றாகும் . வன்முறை நிறைந்த உலகில் நல்லவர் என்ன தீயவர் என்ன ..?