உயிர்த்த ஞாயிறு தினமான இன்று கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும், மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம் ஆகிய முன்று தேவாலயலங்களிலும் மூன்று நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் பாரிய தொடர் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ் மூன்று குண்டுவெடிப்புகளிலும் 100 இற்கு மேற்பட்டோர் உயிரழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களுள் 150 க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன..
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் கொண்டு வரப்படுவதாக வைத்தியசாலை வளாகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அருகாமையிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 25 பேரும், கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தோவாலயம் மற்றும் கொழும்பு மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் உயிரிழந்தவர்களில் 24 பேருடைய சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையினுடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவர்கள் பலர் சத்திரசிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடங்களுக்குப் பொதுமக்கள் பார்வையிட வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கும் மற்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதனாலும் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் இத்தகவல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து மைத்திரிபால பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாவது,
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பம் தொடர்பான விசாரணைகளை முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விசாரணைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விசாரணை முன்னெடுக்கப்படும் கால கட்டத்தில் பொறுமை மற்றும் அமைதி காக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.