மஹியங்கனையில் கோர விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி; பலர் படுகாயம்!

0
406


பதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்துடன் சிற்றுந்து மோதியதில், அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சிற்றுந்தில் 12 பேர் பயணித்துள்ளனர். சிற்றுந்தில் பயணித்த ஏனைய இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தவிபத்தில் 3 சிறுவர்கள் உட்பட பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜுட் ஹென்றிக் (48வயது), அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி (42வயது), அவர்களது மகன் ஜு.ஹெய்ட் (19வயது), மகள் ஷெரேபி (10வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த லிஸ்டர் (34வயது), அவரது மனைவி நிசாலி (27வயது), அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா, ஹனாலி ஆகியோரும் நிசாலியின் தாய் தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ் (56வயது), செல்பியா (53வயது) ஆகியோரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் நிசாலியின் குடும்பத்தினைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று, அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது 12பேர் பயணித்ததாகவும் அவர்களில் 10பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளானவர்களின் குடும்பப் படங்கள் வெளியாகியுள்ளது.

சிற்றுந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தம்புள்ளை, கந்தலம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்று சிற்றுந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 20 வயதுடைய யுவதி ஒருவரும் அவருடைய 5 வயதான சகோதரருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் தாய் மற்றும் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here