சென்னையில் வருகின்ற 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி உலக தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் அந்த விழாவில் உலக தமிழ் வர்த்தக சங்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக உலக தமிழர் திருநாள் விழா ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பேட்டியில், “இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம், சிங்கப்பூர் தமிழ் வர்த்தக சங்கம், தமிழ்நாடு வர்த்தக சங்கம் ஆகியவை சார்பில் “உலக தமிழர் திருநாள்” ஜனவரி மாதம் 10-ந்தேதி சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.
உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், அரசியல் சார்பற்றதாகவும் இந்த விழா அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை இந்த விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் உள்பட பலர் வருகை தருவதாக உறுதியளித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்பட பல நாடுகளில் உள்ள தமிழ் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், அமைச்சர்கள், துணை முதல்வர்கள், கலை துறையினர்கள் ஆகியோர் உள்பட 250 பேர் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கொடுத்துள்ளோம்.
இதில் 36 பேர் அரசியல் பதவியில் இருக்கிறார்கள். இந்த விழாவில் உலக தமிழ் வர்த்தக சங்கத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்த உலக தமிழ் வர்த்தக சங்கம் மொத்தம் 16 நாடுகளில் கிளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் வர்த்தகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே இதன் முதல் நோக்கம் ஆகும். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை முழு ஆதரவை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.