ஒரு ஆண்டு தான்… ஆனாலும் நாம் மறந்து விட்டோம்.
பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கி பேரலையாக ஓராண்டுக்கு முன்பு எழுச்சி பெற்றது. ஆனால் இன்று அதை பற்றி பேச எவரும் இல்லை.
அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயர்களை வெளிப்படுத்தியது இந்தத் கொடும் துயர் நிகழ்வு.
2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.
இரண்டு குழந்தைகளுடன் தனது கணவனின் விடுதலைக்காக போராடி வந்த, அவரது மனைவி யோகராணி கடந்த ஆண்டு 15ஆம் நாள் நோயுற்ற நிலையில் மரணமானார்.
கிளிநொச்சி மருதநகரில் நடந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 3 மணிநேரம் மட்டும் அனுமதிக்கப்பட்டார் அரசியல்கைதி ஆனந்தசுதாகர்.
பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட அவர் மனைவியின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தியதுடன், தனது பிள்ளைகள் இருவருடனும், கதறி அழுது துயரைப் பகிர்ந்து கொண்டார்.
அந்நாளில் எல்லோர் உள்ளங்களும் உருகி துடித்தன. ஆனால் இன்று எவரும் அதை பற்றி பேசவில்லை…
அன்றைய கொடும் வலியான அந்த இறுதி நிகழ்வுக்குப் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை பேருந்தில் ஏற்றும் போது, ஆனந்தசுதாகரின் சின்ன மகளும் அந்த வாகனத்தில் தந்தையுடன் செல்ல ஏறிய காட்சி அங்கிருந்தவர்களை மாத்திரமன்றி, அதுபற்றிய படங்களை ஊடகங்களில் பார்த்த உலகெங்கும் உள்ள தமிழர்களையும் கலங்க வைத்துள்ளது.
தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை உயிரோடு இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிஞ்சுகள் பரிதவித்து நிற்கின்றனர்.
எத்துணையோ கடிதங்கள் எங்கெங்கோ எழுதி உருகி உருகி தமது தந்தையின் விடுதலைக்கு குரல் கொடுத்தார்கள். மைத்திரிக்கும் நேரடியாக கடிதம் எழுதி வேண்டினார்கள். ஆனால் யார் மனமும் இரங்கவில்லை .
மைத்திரி சிங்கள ஆரிய புத்தாண்டில் அதன் பின் சம்பந்தரையும் அழைத்து கொண்டாட வெட்கம் இன்றி சம்பந்தரும் கிரிபத் (பால்சோறு) உண்ண கொண்டாட்டாட்டத்தில் பங்கேற்றார்.
இந்த குழந்தைகள் வாழ்வில் தாய் தந்தையரின்றி திண்டாட்டமும் கண்ணீரோட்டமும் இன்றும் தொடர்கிறது.
சம்பந்தர் ஐயாவுக்கும் நக்கிப் பிழைக்க இலவச ‘கிரிபத்தும்’ (பாற்சோறும்) ‘கவுனும்'(சிங்களப் பணியாரம்).
மூக்கு முட்ட உண்டுவிட்டு மதி மயங்கி சாய ஒன்றுக்கு இரண்டு பங்களாக்கள் பாராளுமன்ற நாற்காலி.
ஆரிய புத்தாண்டு அன்று கூட ஆரிய சிங்கள ஜனாதிபதிக்கு நல்லெண்ணமோ கருணையோ பிறக்கவில்லை.
யாருக்கும் வால் பிடித்தாலும் தனது பதவியே கண்ணாக இருக்கும் சம்பந்தனுக்கும் போராடும் மக்களை பார்க்க போகவோ இந்த குழந்தைகளுக்காக சனாதிபதியோடு பேசவோ இன்று வரை இரக்கம் இல்லை.
தந்தை சிறையில்..தாயையும் பறி கொடுத்து கண்ணீரோடு வாழும் குழந்தைகளின் பால் இவர்களுக்கு மட்டுமல்ல ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எவருக்குமே கருணை பிறக்கவில்லை.
அவர்கள் பொங்கும் கண்ணீரோடு இருக்க இவர்கள் கூட்டு பொங்கல் பொங்கி சாப்பிடுகிறார்கள்.
”அம்மா உயிரோடு இருந்தபோது பலகாரங்கள் சுட்டு, புத்தாடை அணிந்து அப்பாவுக்கும் நல்ல உணவுகளை எடுத்துக்கொண்டு பார்க்கச்செல்வோம். ஆனால், இன்று அரவணைப்பின்றி வாழ்ந்து வருகின்றோம்” – எனக் கூறும் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் கண்ணீரோடு கோரும் ஒவ்வொரு வேண்டுதலும் கரையாத நெஞ்சங்களையும் கரைய செய்யும்.
ஆனால் கல்லுளி மங்கங்களின் கல்லான இதயங்கள் துளி கூட கரையாது!
இது தமிழினத்தின் கோடி துயரில் ஒரு துளி மட்டுமே!
அரசியல் கைதிகளின் குடும்பங்கள், காணமல் ஆக்கப்பட்டவரின் குடும்பங்களை எல்லாமே இன்று கண்ணீரோடு.