தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு, ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தியாகி அன்னை பூபதி அவர்களின் திரு உருவப் படத்துக்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரான்சில் இயற்கையெய்திய வெள்ளைத் தமிழிச்சி அன்னை பவுலா லுயிய் வியோலெத் (Mme. Paula Lugi Violet) அவர்களின் திருவுருவப்படமும் அங்கு வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. ஓள்னே சுபுவா தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்கள் திரு உருவப்படத்துக்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்க மலர் வணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. செவ்ரோன் தமிழ்ச்சோலை, ஆதிபராசக்தி நாட்டிய பள்ளி, ஓள்னே சுபுவா தமிழ்ச் சோலை, செல் தமிழ்ச்சோலை, பொபினி தமிழ் சோலை ஆகிய பாடசாலை மாணவிகளின் நடனம், எழுச்சி நடனங்கள், எவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களின் கவியரங்கம், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த எஸ்.மேரி அவர்களின் பேச்சு, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஜெயா அவர்களின் கவிதை என்பன அரங்கை அலங்கரித்தன.
நிகழ்வில் சிறப்புரையை திரு.கேசாநந்தன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், இன்றைய நிலையில், தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை தாம் வாழும் நாட்டின் அரசியல் உயர் பணிகளுக்கு இட்டுச்செல்வதன்மூலம் எமது இலக்கை அடையமுடியும் என்றும் முக்கிய தமிழ் வரலாற்று நூல்களை நாம் வாழும் நாடுகளின் மொழிகளுக்கு மாற்றவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திக் கூறிய அவர், இன்று தமிழர் உரிமைகள் வேகமாக சிங்கள மயமாகி வருவதையும் காட்டமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்களின் பேச்சும் இடம்பெற்றது. அவர்தனது உரையில், அன்னை பூபதி அவர்களின் தியாகம் பற்றிக் கூறியிருந்ததுடன், அன்னை பவுலா அவர்களின் உணர்வு பற்றியும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டிய கடப்பாடு பற்றியும் கூறியிருந்தார்.
அத்துடன், வரும் 22.04.2015 புதன்கிழமை பிரான்சின் பெத்தின் (BETHINES 86310) கிராமத்தில் நடைபெறவுள்ள அன்னை பவுலா அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள லாச்சப்பலில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் செல்ல விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை உடன் பதிவுசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.