கடந்த 12.04.2019 வெள்ளிக்கிழமை பிரான்சு நாடாளுமன்றத்தில் “10 ஆண்டுகள் முடிந்த நிலையில் சிறிலங்காவில் தமிழர்களின் நிலைமை” என்னும் தலைப்பில் பிரான்சு நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட ஈழத்தமிழர் நலன்காப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு மதியம் 14.30 மணிக்கு ஆரம்பமானது.
13.30 மணிக்கு மாநாட்டில் பங்குபற்றுகின்றவர் உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். 14.30 க்கு இக்குழுவின் தலைவியும், முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய Mmme. Marie – Georg Buffet அவர்கள் ஆரம்பித்து வைத்து மக்கள் பேரவையின் பொறுப்பாளரும் அனைத்துலக மக்கள் பேரவைப்பேச்சாளருமாகிய திரு.திருச்சோதி அவர்கள் அகவணக்கத்தை தொடக்கி வைக்க, தொடர்ந்து இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் நிந்துலன் இன்றைய மாநாட்டை வழிநடத்தினார். திரையில் சிறிலங்காவில் நடைபெற்ற இனஅழிப்பின் 10ஆண்டுகளின் பின்னரான நிலைப்பாடும், புலம்பெயர் நாடுகளின் தமிழர்களின் சனநாயக அரசியல் ரீதியான போராட்டங்கள், தமிழரின் பூர்வீக சரித்திரம் பற்றியதொரு ஆவணம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து டாக்டர்.செல்வி. சாருகா தேவகுமார் அவர்களின் நீதிக்கான மாற்றுஆய்வுக்கட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகைதந்திருந்த திரு. விஐயகுமார் நவநீதன் அவர்கள் தமிழும் அவர்களின் பூர்வீக நிலமும் என்ற தலைப்பில் அனைத்து நிழற்படத்தரவுகளுடன் தெளிவு படுத்தியிருந்தார். தொடர்ந்து நாடுகடந்த அரசின் சார்பாக உறுப்பினர் திருமகிந்தன் சுப்பிரமணியம் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து மூத்த தமிழின உணர்வாளர் ஐயா இக்பால் மொகமட் அவர்கள் தனது ஆய்வுக்கருத்தை ஆற்றியிருந்தார். முஸ்லீம் மக்களாக நாம் மதத்தால் தான் வேறுபட்டவர்கள் என்றும் மொழியால் நாம் தமிழ்மக்கள் என்பதையும், கடந்த 71 வருடங்களுக்கு மேலாக பெரும்பான்மையான சிங்களவர்களால் தமிழர், தமிழ்மொழி பேசுகின்றவர்கள் என்பதால் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றோம் என்றார். அவரைத் தொடர்ந்து சுரேசு தர்மலிங்கம் கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்ததுடன் கிழக்கு மக்களின் போருக்கு பின்னான அவலங்களை தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சுவிசு நாட்டின் பிரசையும் தமிழர் தாயகப்பகுதிக்குச் சென்று பலநாட்கள் தங்கி தமிழர்களின் நியாயமான சனநாயக வழியிலான போராட்டங்களையும், அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் பற்றிய ஆவணத்தை நிழற்படங்களோடு காட்சிப்படுத்தி உரையும் ஆற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ராஸ்பேக் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர் திருமதி கிருபாகரன் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து தமிழர் மனிதவுரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் திரு.ச.வே.கிருபாகரன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாற்றியிருந்தார். இளையவர்களின் எதிர்கால நிலைப்பாடு சம்பந்தமாக செல்வன் பிரசன்னா சுந்தரசர்மா அவர்கள் உரையாற்றியிருந்தார். தொடர்ந்து நோர்வே நாட்டிலிருந்து வருகைதந்த சர்வதேச மக்கள் பேரவை ஆலோசனை உறுப்பினர் திரு. ஸ்ரீபன் அவர்கள் அன்றைய நிகழ்வின் தொகுப்பை மேற்கோள்காட்டி உரையாற்றினார். தொடர்ந்து மக்களிடம் கேள்விகளுக்கு விடப்பட்டது. அதற்கான பதில்களை தாயகத்திலிருந்து வந்தவர்களும் புலம்பெயர் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவோர் வழங்கியிருந்தனர். இறுதியாக சபையின் தலைவர் Mmme. Marie – Georg Buffet அவர்கள் பதிலளித்திருந்தார். போருக்குப் பின்னான 10 வருடகாலத்தில் சிங்கள தேசம் தமிழ்மக்களின் வாழ்வில், கல்வியில், பொருளாதாரத்தில் இதயசுத்தியுடன் எந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டைச் செய்யவில்லை என்பதை காண்பதோடு தன்னுடைய செயற்பாட்டை தொடர்ந்து தமிழ்மக்களுக்காக ஆற்றுவேன் என்ற கருத்துக்கள் பலவற்றை வழங்கினார். இதன் பின்னர் இறுதிநேரத்தில் வந்து கலந்து கொண்ட 95 மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொப்பின் அவர்களும் உரையை தமிழ்மக்களுக்குச் சார்பாகவும் ஆற்றியிருந்தார். இந்த மாநாட்டில் பல கட்டமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஐ.நா. பணிமனைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், இளையோர்கள், சங்கங்களை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மாலை 7.00 மணிக்கு மாநாடு நிறைவுக்கு வந்தது.