வவுனியா பாலமோட்டையில் வசித்துவரும் முள்ளந் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபரொருவரின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமுர்த்தி அவர்களின் புதல்வி சிந்து செய்த செயல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது.
ஏற்கனவே முகநூலில் ஒரு சிறுமி தனது பதின்மூன்றாவது பிறந்த நாளில் மலசலகூடம் அமைத்துக் கொடுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து தான் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் செய்து கொடுத்ததாகவும் தனது திட்டத்தை வரவேற்று பலபேர் தனக்கு முன் வந்து உதவுகிறார்கள் என்றும் பதிவிட்டிருந்ததை முன்மாதிரியாகக் கொண்டு தன்னுடைய பிறந்தநாளுக்கும் தன்னால் இயன்றதைச் செய்ய முன்வந்துள்ளார் இவர்.
இதன்படி போரில் காயம்பட்டு நாட்டுக்காக தங்களது அவயவங்களை இழந்து நடக்க முடியாது சக்கர நாற்காலியில் இருந்து வீட்டில் கிணறு இல்லாமல் தூர இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருபவர்களுக்கான உதவியைச் செய்ய முடிவெடுத்து தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது இருவரின் விபரம் கிடைத்தது.
அதில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவர் வவுனியா பாலமோட்டையில் வசித்துவரும் முள்ளந் தண்டு வடம் பாதிக்கப்பட்ட யோ.சியந்தன் என்பவர்.
தனது 13 வது பிறந்தநாளில் அவரின் நிலைமையினைக் கருத்திலெடுத்து, தான் சேர்த்த 253 000/= பணத்தில் தனது தந்தையின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்று அவரின் பத்தாவது நினைவு நாளில் ஒரு நூலை வெளியிட்டதுடன் அந்த நிகழ்வில் “சத்தியமூர்த்தி அறக்கட்டளையினை ” அங்குரார்ப்பணம் செய்து அதனூடாக சேர்ந்த பணத்தை வைத்து குழாய்க் கிணறு செய்து நேற்றுமுன்தினம் தனது பிறந்த தினத்தில் கையளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குறித்த கிணற்றில் இருந்து அவர்களின் காணிக்கு வெளியில் ஒரு குழாய் அமைத்து வெளியில் இருந்து யாருக்கும் தண்ணீர் தேவை என்றால் எந்தநேரமும் எடுக்க கூடியவாறும் கால்நடைகள் குடிக்க கூடியவாறும் சிறிய தொட்டி அமைத்து வெயில் காலத்தில் பறவைகளும் மிருகங்களும் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளவும் உதவி செய்துள்ளார்.
மேலும் இத்திட்டம் இத்தோடு நின்று போகாமல் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தான் செய்து கொடுப்பேன் என்றும் உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் சிந்து .
மிகச் சிறிய வயதுடைய அந்த சிறுமி மிகப் பெரும் சேவையை ஆற்றியுள்ளமை, மிகவும் பெருமைக்குரிய விடயம் எனப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.