140 வருடங்களுக்கு பின்னர் அதிக வெப்பத்துடனான வானிலை தற்போது நிலவுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான புள்ளிவிபரங்களை ஆராய்ந்ததில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எல்நினோவின் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 30 வருடங்களில் காணப்பட்ட நாட்டின் சாதாரண வெப்பநிலையானது 2 முதல் 3 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
இதேவேளை, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மொனராகலை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.