நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் வறட்சி காரணமாக 3,20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
75,000-இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வறட்சி நிலவும் பகுதிகளுக்கு நீரை விநியோகிப்பதற்காக 207 பவுசர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ பரவும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு இதுவரை 50 காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், வெப்பத்துடனான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த நாட்களில் சூரியன் இலங்கைக்கு நேரடியாக உச்சம் கொடுப்பதால், உஷ்ணமான காலநிலை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கு கிடைக்கும் சூரிய சக்தியின் அளவு அதிகரித்துள்ளதுடன், நாட்டின் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் அதிகளவு ஆவியாகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.