2009 சித்திரையின் ஆரம்பநாட்களவை..!
அன்று கொழுத்திய ஆதவனுக்கும்,
அங்கு வீசிய காற்றுக்கும்
அந்த இருளுக்கும்
ஆனந்தபுர மண்ணுக்குமே அனைத்துமே வெளிச்சம்..!
என்ன நடந்தது..
எப்படி நடந்தது..
ஏனிப்படியானது…
ஆனந்தபுரம்..
அதன் பேரைச்சொல்லவே
நாக்கு உளறும்..!
ஆள் வேறுபாடின்றி ஐறூறுக்குமதிகமான
எங்கள் அருமைச் செல்வங்களை
அச்சாணிகளை…
அத்திவாரங்களை…
ஆணிவேரானவரை..
கொத்தாக இழந்தோமே…
குரலெடுத்து அழுதோமே..
வழிநடத்தும் வல்லோருடன்…
வாழ்நாள் சாதனையாளர்களையும்…
சரித்திரங்கள் படைத்த சாதனைகளின் சொந்தக்காரரையும்..
இழந்த நாட்களிவை…
இனியென்று காண்போமிவரை…
குப்பி கடித்தீரே…
குண்டணைத்து செத்தீரே..
தப்போமென நினைத்து
இறுதிவரை போராடி உயிர்நீத்த உத்தமரே…
தம்பிகளே..
எங்கள் தங்கையரே…
தப்பிவந்தோர் சொன்ன கதை
எங்கள் நெஞ்சறையில் அறைந்ததையா..
அருகிருந்த போதும்
ஆதரவுச்சூடு தரமுடியவில்லை…
கிட்டவே இருந்தபோதும் உம்மைக்
காவிவர முடியவில்லை…
இனியவரே எம்மவரே…
எங்களை மன்னிப்பீரோ..!
தங்கைகளே..
உங்கள் உயிர் குடித்த உங்களின் கைக்குண்டு..!
கூடவே வைத்திருப்பீர்.. குப்பி கைவிட்டாலுமென..
முன்னைய காலத்தில் அங்காங்கு ஒன்றிரண்டு..
ஆனால் ஆனந்தபுரத்திலோ…
அடுகடுக்காய்..
உங்களுயிர் பறித்து உங்களைக்காத்தன..
உங்கள் கைக்குண்டுகள்…
அன்புத் தங்கைகளே..
அந்தக் கணத்திலே…
யாது நினைத்தீரோ..
யாரை நினைத்தீரோ
சூழ்ந்திருந்த பகைவன் வேலிக்கு வெளியே
ஏதும் முடியாதவராய்…நாம்
முயற்சிகள் யாவும் முடியாமல் போயினவே..!
உங்கள் குருதியால் தேச விடுதலையின் இறுதி வரலாறு
எழுதப்பட்டுக்கொண்டிருந்தது..
நீங்கள் செய்த உயிர்க்கொடை வீணாகிடாது…
நிச்சயம் தமிழினம் உம்மை மறக்காது…
ஆனந்தபுர வல்லமைகளே
உங்கள் பேர் வாழும்..உங்கள்
ஆத்மபலம் கொண்டு நாளை
எங்களினம் மீளும்..!