கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்மேனியப் படுகொலையின் நூற்றாண்டை முன்னிட்டு உரையாற்றிய உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தை பொப் பிரான்சிஸ் அவர்கள், தனது உரையில் இப்படுகொலை குறித்து தெரிவித்த கருத்து உலக ஊடகங்களின் முதன்மைச் செய்தியாகியுள்ளது. அதாவது, நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இந்தப் படுகொலையை ‘20ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை ஆர்மேனியப் படுகொலை (Armenian Genocide : The first genocide of the 20th century)’ என அவர் வர்ணித்திருக்கின்றார்.
முதலாம் உலகப் போருக்குப் பின்னர் துருக்கிய ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மேனியர்கள் வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1915ம் ஆண்டு ஏப்ரல் 24ம் திகதி ஆரம்பமாகிய இப்படுகொலைகள் ஓராண்டுகளுக்கு மேலாக நீடித்தன. இந்தக் காலப்பகுதியில் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மண்ணைவிட்டு வேளியேற்றப்பட்டனர். ஏராளமான மக்களை குடிநீரோ, தண்ணீரோ அற்றி பாலைவனங்களுக்கு விரட்டிச்சென்று பட்டினியால் சாகடித்தார்கள். சுமார் ஒன்றரை மில்லியன் ஆர்மேனியர்கள் ஒட்டோமான் பேரரசுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தப் படுகொலையில் இருந்து தப்பித்த மக்கள் இப்போது புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்றார்கள். தங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நூற்றாண்டுகளாக போராடி வருகின்றார்கள். ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த துருக்கிக் குடியரசு இப்படுகொலையை ஓர் இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது. தனக்கு சார்பான நாடுகளை அதற்கு ஆதரவாக பேசுவதற்கும் வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் ஆர்மேனிய இனம் தங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நூற்றாண்டாக நீதிகேட்டு ஓய்வின்றிப் போராடி வருகின்றார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இப்போதுதான் ஓரளவு நீதி கிடைத்து வருகின்றது. இதுவொரு இனப்படுகொலை என பிரான்ஸ் நாடு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆர்மேனிய இனப்படுகொலைகளை மறுப்பது ஒரு குற்றம் என பிரெஞ்சு மேலவை சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருப்பதுடன், இதனை மறுக்கும் எவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 45,000 ஈரோக்கள் வரை தண்டமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன், இதுவரையில் சுமார் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்றது இனப்படுகொலையே என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அத்துடன், இதனை இனப்படுகொலையாக ஏற்றுக்கொள்ளுமாறு தற்போதைய துருக்கிய அரசை மேலும் பல நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கோரி வருகின்றன. ஆனால் துருக்கி அதனைக் கடுமையாக மறுத்து வருகின்றது. இந்நிலையில்தான் பொப் ஆண்டவர் கடந்த 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை இந்த இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிராத்தனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் 20ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை இதுவென அறிவித்திருக்கின்றார்.
பொப் ஆண்டவரின் இந்த அறிவிப்பை துருக்கிய அரசு கடுமையாக எதிர்த்திருக்கின்றது. உள்நாட்டுப் போரில் நடந்த மோதலில் நடந்த மரணங்களே அவை. ஒருபக்கத்தின் சார்பாக நின்று இந்த வரலாற்றை வலிந்து திரிபுபடுத்த முயல்கின்றார்கள் என்று தெரிவித்திருக்கும் துருக்கிய அரசு, இதுவொரு இனவழிப்பல்ல என்று மறுத்திருப்பதுடன், பொப் ஆண்டவரின் ஆதரமற்ற குற்றச்சாட்டு இதுவெனவும் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், வத்திக்கானுக்கான தமது தூதுவரையும் திரும்பப் பெற்றிருக்கின்றது. துருக்கியின் வெளிநாட்டு அமைச்சு அலுவலகம் தூதுவரை நாட்டுக்குத் திரும்புமாறு அறிவித்தலை அனுப்பியிருக்கின்றது.
20ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலைக்காக இந்த உலகம் குரல்கொடுத்து வருவது நம்பிக்கை தரக்கூடியது. அதுவும் உலகின் முதல் பெரும் மதமாகக் கருதப்படும் கத்தோலிக்க திருத்தந்தை பொப் பிரான்சிஸ் இவ்வாறான ஒரு அறிவித்தலை விடுத்திருப்பது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மனித இனம் ஒவ்வொன்றுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வேளையில் 21ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையையும் இந்த உலகம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆர்மேனிய இனம் இதனையொரு இனப்படுகொலையாக அங்கீகரிக்க வைத்ததில் இன்று வெற்றிகண்டுவந்தாலும், நூற்றாண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு அப்போதே நீதி கிடைத்திருந்தால் அவர்கள் எத்தனை ஆறுதல் அடைந்திருப்பார்கள். தாமதமான நீதி அநீதிக்குச் சமமானது என்பதுபோல் இது அமைந்துவிட்டது. ஆனால், இவ்வாறான ஒரு காலதாமதமான நிலையை தமிழ் இனத்திற்கும் ஏற்படாமல் தடுக்க இப்போதே போராட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். ஆர்மேனிய மக்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலை என ஏற்றுக்கொண்ட நாடுகள், அமைப்புக்கள் மத்தியில் இப்போதே தமிழினத்திற்கு நடந்ததும் ஓர் இனப்படுகொலை என்பதை ஏற்கவைப்பதற்கான போராட்டங்களை தமிழினம் விரிவுபடுத்த வேண்டும். இதுவே காலத்தில் நீதி கிடைக்க வழி வகுக்கும்.