கிளிநொச்சி பரந்தனில் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது சொந்தக் காணியை மீண்டும் தன்னிடம் தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் மேற்கொண்ட பெண்மணி அதிகாரிகளின் உறுதிமொழியை நம்பி உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் ஆகியோரின் உறுதிமொழிகளை நம்பியே தான் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக உண்ணாவிரதம் இருந்த இந்திரா யோகேந்திரன் என்ற பெண்மணி தெரிவித்தார்.
1972ஆம் ஆண்டு தனது தந்தையார் தனக்கு சீதனமாக வழங்கிய காணியை படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர் என்று கூறிய மேற்படி இந்திரா அதனை விடுவிக்குமாறு கோரி நேற்று முன்தினம் புதன்கிழமை சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். உண்ணாவிரதம் இருந்த இவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் கிளிநொச்சி பொலிஸாரும் படை அதிகாரி ஒருவரும் மேற்படி பெண்ணிடம் நேரடியாகச் சென்று உரையாடினர். இந்தப் போராட்டத்தை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். ஆனால், உறுதிமொழி தந்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவதாக அவர் கூறினார்.
இதையடுத்து அவரை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், மேலதிக மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாட ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை உரிய பதில் தருவதாகவும் அதுவரை போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து தான் போராட்டத்தை நிறுத்தியதாக கூறிய இந்திரா, திங்கட்கிழமை வழங்கப்படும் பதில் திருப்தியளிக்காவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறினார்.