லிபியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கியதில், அதில் பயணம் செய்த 400 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பிறிதொரு படகில் பயணத்தை மேற்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.
உயிருடன் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் ஆபிரிக்க சஹாரா பிராந்தியத்திலிருந்து பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களது படகில் சுமார் 550 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் படகை சுறா மீன்கள் கூட்டமாக சுற்றி வளைத்ததால் அந்தப் படகு ஒரு பக்கமாக சரிந்துள்ளது.
சுமார் 24 மணி நேரம் கழித்து சரிந்த அந்தப் படகிலிருந்து சுமார் 150 பேர் திங்கட்கிழமை மீட்கப்பட்டு சிசிலிய போர்ட்டோ எம்பெடோக்கிள் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு உயிர் தப்பியவர்களே பிறிதொரு படகு மூழ்கி 400 பேருக்கும் அதிகமானோர் இறந்தது தொடர்பான அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் பிராந்தியத்தில் நிலவிய அமைதியான காலநிலையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி 8,0000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.