சாப்பிட்டு கொண்டிருந்தவரை அழைத்து சென்று கொன்றார்கள்- தப்பியவர் பரபரப்பு வாக்குமூலம்!

0
179

andhra-shoot3ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது திட்டமிட்ட படுகொலைதான் என்பதற்கு  முக்கிய சாட்சியாக சேகர், பாலச்சந்தர், இளங்கோ ஆகிய 3 பேர் உள்ளனர். உண்மை கண்டறியும் குழுவினருடன் வந்த அவர்கள் சம்பவத்தன்று நடந்தவற்றை கூறினர்.

ஆந்திர பொலிஸாரிடமிருந்து தப்பிய சேகர் கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பாக எங்கள் பகுதியை சேர்ந்த 7 பேருடன் வேலைக்கு பேருந்தில் சென்றோம். அவர்கள் 7 பேரும் கடைசி சீட்டில் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். நான் முன்பக்கம் உள்ள சீட்டில் ஒரு பெண் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது நகரி அருகே பேருந்தை சோதனையிட்ட ஆந்திர பொலிஸார் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த 7 பேரையும் அழைத்துச் சென்றனர். பெண்ணின் அருகே அமர்ந்திருந்த நான் தப்பினேன். பின் உடனடியாக வீடு திரும்பினேன். பின்னர் பொலிஸார் அழைத்து சென்ற 7 பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

பொலிஸார் பிடித்துச் சென்ற பின் அவர்களிடமிருந்து தப்பிய இளங்கோ கூறியபோது, துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதற்கு முன் இரவில் நகரியில் உள்ள ஒரு பானிபூரி கடையில் நானும் எனது நண்பர் பன்னீர்செல்வம் இருவரும் பானிபூரி சாப்பிட்டோம். பானிபூரி சாப்பிட்டு முடிந்ததும் ஒரு ஆட்டோவில் ஏறி புறப்பட்டோம். அப்போது காரில் வந்த ஆந்திர பொலிஸார் எங்களை மடக்கி பிடித்தனர். பின்னர் ஒரு மினி லொரியில் எங்களை ஏற்றிச் சென்றனர். அதில் 15 க்கும் மேற்பட்டோர் இருந்தனர். லொரி சுமார் 1 மணி நேர காட்டு பயணத்துக்கு பிறகு ஒரு வனச்சரக அலுவலக வளாகத்தில் நிறுத்தினர். அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது போலீஸார்  அருகில் இல்லாததை உணர்ந்த நான் அங்கிருந்து தப்பி காட்டு பகுதியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக திருப்பதி நகரை அடைந்த நான்  வேலூருக்கு வந்து சேர்ந்தேன். இங்கு வந்த பின்னரே செம்மரம் வெட்டி கடத்திய தமிழக தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதில் என்னுடன் வந்த பன்னீர்செல்வமும் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது என்றார்.

பாலச்சந்தர் கூறியபோது, நான் என் நண்பர்களுடன் கட்டட வேலைக்காக ஆந்திரா புறப்பட்டு சென்றேன். பஸ் தமிழக எல்லையை அடைந்தபோது மது வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினேன். ஆனால் நான் திரும்பி வருவதற்குள் பஸ் புறப்பட்டு சென்று விட்டது. நான் வேறு பஸ்சில் ஏறி திருப்பதி சென்றவுடன், என்னுடன் வந்தவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் பஸ்சில் வந்த எங்களை ஆந்திர பொலிஸார் பிடித்து வைத்துள்ளனர் என்றனர். இதனையடுத்து அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வந்து விட்டேன். மறுநாள் அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட தகவல் அறிந்து வேதனை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here