மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக பணியாற் றிவரும் அதிமேதகு இராயப்பு யோசப் ஆண்டகை வியாழக் கிழமை தனது 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். இதன் ஞாபகார்த்தமாக நேற்று மன்னார் தோட்டவெளியில் புனித யோசப் வாஸ் அடிகளாரின் ஆலயத் திறப்பு விழாவும் இடம்பெற்றது.
-தனது பெற்றோருக்கு நான்காவது புதல்வராக 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி இவர் பிறந்தார். நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியையும் நடுநிலைக் கல்வியின் ஒரு பகுதியையும் நெடுந்தீவு புனித சவேரியார் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்றார். பின் இவரின் பெற்றோர் 1950ஆம் ஆண்டில் மன்னார் மாவட்டத்தின் செட்டிக்குளத்திலுள்ள முகத்தின்குளத்தில் குடியேறியதைத் தொடர்ந்து 1954ஆம் ஆண்டு முருங்கன் ரோ.க.பாடசாலையிலும் அங்குள்ள விடுதியிலும் தங்கியிருந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.
-1967 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் மறைந்த ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து முருங்கன் உயிலங்குளம் பங்கில் துணைப் பங்குகுருவாக நியமிக்கப்பட்டு தனது குருப்பணியை தொடர்ந்தார்.
-அத்துடன் 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக இராயப்பு யோசப் ஆண்டகை மடுத்திருப்பதியில் அபிஷேகம் செய்யப்பட்டார். -ஆயரின் பவள விழாவை முன்னிட்டு நேற்று மன்னார் தோட்டவெளியில் மீள் குடியேறியிருக்கும் மக்கள் மத்தியில் புனித யோசப் வாஸ் அடிகளாரின் பெயர் கொண்ட புதிய ஆலயம் காலை 7 மணியளவில் ஆயரால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது.