தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை பகுதியைக் குறுகிய நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்திய தேனியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்.
உலகின் பல்வேறு பகுதிகளில் கடல்களுக்கு இடையே நீந்திக் கடந்து சாதனை படைப்பவர்களின் சாதனைக் களமாக தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை பகுதியும் ஒன்று. கோடைக்காலமான மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் இக்கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். கடந்த ஆண்டு வரை பல்வேறு நீச்சல் வீரர்கள் இந்தக் கடல் பகுதியை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். இதில் கடந்த 1994-ம் ஆண்டு தனது 12 வயதில் பாக் நீரிணையை 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்த நீச்சல் வீரனாக குற்றாலீஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் தேனியைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஐஸ்வந்த். 10 வயதுச் சிறுவனான ஜஸ்வந்த் தேனியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நீச்சலில் ஆர்வம் கொண்ட சிறுவன் ஜெய் ஜஸ்வந்துக்கு கடந்த 3 ஆண்டுகளாகத் தேனி மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் விஜயகுமார் பயிற்சி அளித்து வருகிறார். இதன் விளைவாகக் கடந்த 2017-ம் ஆண்டு 81 நிமிடங்கள் தொடந்து நீந்தி உலக சாதனை படைத்துள்ளான்.
மேலும், மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து கடலில் நீந்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்ட சிறுவன் ஜஸ்வந்த், தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான 30 கி.மீ தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்தினார்.
இந்தச் சாதனையை படைப்பதற்காகப் புதன்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து தன் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டுக் குழுவினருடன் சிறுவன் ஜஸ்வந்த் தலைமன்னாருக்குச் சென்றான். இன்று அதிகாலை 4 மணியளவில் தலைமன்னார் துறைமுகத்திலிருந்து நீந்தத் துவங்கிய சிறுவன் ஜெய் ஜஸ்வந்த் இன்று பகல் 2.35 மணிக்குத் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் கரையேறினான்.
சாதனை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்
தலைமன்னார் தனுஷ்கோடி இடையிலான 30 கி.மீ தூரத்தை சுமார் 10.30 மணி நேரத்தில் நீந்திக் கடந்ததன் மூலம் கடந்த 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துச் சிறப்பு பெற்றான் தேனியைச் சேர்ந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்.சாதனைச் சிறுவன் ஜஸ்வந்துடன் இந்திய கடல் எல்லையிலிருந்து ரயில்வே காவல் பிரிவு டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் நீந்தி தனுஷ்கோடி வந்தனர்.
சாதனைச் சிறுவன் ஜஸ்வந்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் பயிற்சியாளர் விஜயகுமார், உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வரவேற்றுப் பாராட்டினர். இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் சிறுவன் ஜஸ்வந்துக்கு பரிசளித்துப் பாராட்டினர்.இந்தச் சாதனையைப் படைத்த சிறுவன் ஜஸ்வந்த், தலைமன்னாரிலிருந்து இந்திய கடல் எல்லைப் பகுதி வரை கடலின் நீரோட்டம் குறைந்த வேகத்தில் இருந்ததால் விரைவாக நீந்த முடிந்தது.
இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்ததும் அதன் வேகம் கூடியது. இதனால் தனுஷ்கோடிக்கு வர தாமதமானது. நீரோட்டம் குறைந்த வேகத்தில் இருந்திருந்தால் இன்னும் குறைவான நேரத்தில் நீந்தி முடித்திருப்பேன்’ எனக் கூறினான்