அரசியல் தீர்வு விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் கிடப்பில் போட அனுமதியோம் – சம்பந்தன்

0
125
sampanthan 2364eeஅரசியல் தீர்வு சம்பந்தமாக புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு காலஅவகாசம் தேவை என்பது உண்மையே என்றாலும், அதற்காக தீர்வு விடயங்களை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று கொண்டாடப்படும், சித்திரைப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக – கௌரவமாக – நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் என்று சித்திரைப் புத்தாண்டில் நாம் பிரார்த்திக்கின்றோம்.
அதுவரை நாம் ஓயாது போராடுவோம் என்றும் சபதம் எடுத்துக் கொள்கின்றோம். 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் ஆட்சி மாற்றத்தையும் அரசியல் தீர்வையும் எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்த மாதிரி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் நீதியைக் கட்டியெழுப்பக்கூடிய நல்ல சூழல் ஓரளவுக்கு வந்துள்ளது. இதனை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நல்லாட்சி முழுமை பெறவேண்டும் என்றால் வாக்குறுதிகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியே ஆகவேண்டும். சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற போதிலும் அரசியல் தீர்வு குறித்த வாக்குறுதிகளுக்கு காலஅவகாசம் தேவை என்பது உண்மைதான்.
அதற்காக அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களைக் கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை.அவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளினால் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். இந்தநிலைமை இந்த ஆட்சியில் மாறவேண்டும். புதிய ஆண்டில் இந்தநிலைமை மாறவேண்டும். மாறக்கூடிய சூழலும் இல்லாமல் இல்லை. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here