அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகும் இலக்குடன் அந்நாட்டின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் அமெரிக்கர்களுக்கு சாம்பியன் ஒருவர் தேவையாக உள்ளதாகவும் அந்த சாம்பியனாக வருவதற்கு தாம் விரும்புவதாக இணையத்தளம் ஊடான பிரசாரத்தில் ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் பிரேரிக்கப்பட்ட போதிலும் ஒபாமாவிடம் அவர் தோல்வி அடைந்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஹிலரி கிளிண்டன் அறிவிப்பார் என பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதை ஹிலரி கிளிண்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ தேர்தல் பிரசாரப் பேரணியை மே மாத்தின் மத்திய பகுதியில் அவர் நடத்தலாம் என அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.