மேதினத்தன்று மைத்திரி – மகிந்த பலப்பரீட்சை!

0
172
maithri mahin 2மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு ஆப்பு வைத்து அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள மே தினத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் தனியான மேதினக் கூட்டத்தை நடத்தி தங்கள் பலத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த மேதினம் மகிந்த அணிக்கும் மைத்திரி அணிக்குமான பலப்பரீட்சையாக அமையும் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு ஹைட்பார்க்கில் இடம்பெறவுள்ளது. இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார். ஆனால் அந்தக் கூட்டத்தை கட்சியின் கணிசமான தொகையினர் பகிஷ்கரித்து மாற்று மே தினக்கூட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனையில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
இதில் கட்சியில் மகிந்த ராஜபக்ஷ சார்புத் தரப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்திருக்கின்றனர். இவ்வாறு ஒரு கூட்டம் நடத்தப்படுமாயின் அது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனம் எடுத்த தீர்மானத்துக்கமைய கிருலப்பனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுதந்திரக்கட்சி ஆசிரியர் சங்கச் செயலாளர் வசந்த ஹந்த பான்கொட தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹைட்பார் மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்ஷன நேரில் சென்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுத்த போதிலும் அக்கூட்டத்தில் மகிந்த பங்கேற்காது கிருலப்பனை கூட்டத்தில் பங்கேற்கத் தீர்மானித்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அந்த மேதினக் கூட்டத்தில் பங்கேற்பதென சுதந்திரக்கட்சி தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருப்பதாகவும் அறிய வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கவிருக்கும் சுதந்திரக்கட்சி மே தினக்கூட்டத்தை பகிஷ்கரித்து மாற்றுக் கூட்டத்தில் கலந்து கொள்வோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி உயர்மட்டம் மேற்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகப்பிளவுபடலாமெனவும் மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தனியாக இயங்கக்கூடிய நிலை ஏற்படலாமெனவும் விரைவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த சில கட்சிகளுடன் இணைந்து தனித்து களமிறங்கலாமெனவும் அறிய வருகின்றது.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் சுதந்திரக்கட்சி பிளவுபட்டு தேர்தலில் இரண்டு பக்கமாகப் போய்விடலாம். அது கட்சியை தேர்தலில் பின்னடைவுக்குக் கொண்டு செல்லலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளைஇ கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியையும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் சந்தித்துப் பேசிய இவர்கள் கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் கடும் தொனியில் கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கட்சியை பலவீனப்படுத்த முனைவோர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here