போரினால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள வவுனியா – பாரதிபுர மக்கள் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா – பாரதிபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்ததாகவும், தற்போது இந்த வீட்டுத்திட்டங்களுக்கான நிதி சீரான முறையில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து, பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்துக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட து.
ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்துக்கான அடுத்த கட்ட நிதி இதுவரை வழங்கப்படாமையால், தமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், 2018 ஆம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டடப் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளதனால், ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதுடன், தாம் தற்போது கடனாளிகளாகியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.