அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றுவோம். எவ்வாறாயினும் 175 உறுப்பினர்கள் இந்த திருத்தத்திற்கு ஆதர வாக இருப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளுக்கு தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காவிடின் பொதுத் தேர்தலின் போது மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி வழங்குவார்கள் எனவும் அமைச்சர் சுட்டிகாட்டினார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினை பாராளுமன்றில் சமர்ப்பித்தோம். எனினும் இதற்கு எதிர்க்கட்சிகளினால் பாரியளவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அத்தோடு அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
எனினும் அதற்கான திருத்தங்களையும் அமைச்சரவையில் அங்கிகரித்தோம்.ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை கொண்டு வர முனைவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை கொண்டு வரும் நோக்கம் எமக்கு இல்லை. ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் வாக்குறுதிகளுக்கு அமைவாக ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவுள்ளோம். நாட்டிற்கு சர்வாதிகார தன்மையை கொண்ட ஆட்சி முறைமையை நாம் நீக்கி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இதன்பிரகாரமே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் கொண்டு வந்தோம் .இவற்றில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்திற்கு அமைவாக திருத்தம் மேற்கொண்டு 20 ஆம் திகதி அதனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
இந்நிலையில் குறித்த சட்டத்திருத்ததிற்கு சுதந்திர கட்சியினரின் ஆதரவு எமக்கு கிடைக்கப்பெறும். எனினும் எமது அரசின் நிதிகோரல் யோசனை வாக்கெடுப்பின் போது உண்மையான எதிர்க்கட்சியை நாம் அறிந்துக் கொண்டோம்.
எனவே குறித்த யோசனையின் போது எமக்கு எதிராக செயற்பட்ட 50 உறுப்பினர்கள் உதவிபுரியாவிடனும் 175 பேரினுடைய ஆதரவுடன் நாம் 19 ஆவது திருத்ததை நிறைவேற்றியே தீருவோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் 50 பேரும் இந்த திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பர்.
எனவே மக்களின் அபிலாஷைகளுக்கு தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் இல்லையேல் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது மக்களிடமிருந்து அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்றார்.