21.03.2019
நாட்டுப் பற்றாளராக மதிப்பளித்தல்!
பிரான்சில் கடந்த 15.03.2019 வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் சாவடைந்த பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம்.
29.07.1966 இல் யாழ்ப்பாணம் பாசையூரைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த அ.பவுஸ்ரின் அவர்கள் 1990 ஆம் ஆண்டு முதல் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் இணைந்து செயற்பட்டு வந்தார். அந்தக் காலப்பகுதி முதல் ஒரு பிரதேசச் செயற்பாட்டாளராகவும், தாயகம் நோக்கிய ஏனைய செயற்பாடுகளிலும் 15.03.2019 வரை உழைத்தவர். நிதிப்பங்களிப்பு, ஒன்றுகூடல், பேரணிகள், மாவீரர்களின் நினைவேந்தல்கள், மாவீரர்நாள் மற்றும் ஏனைய உப கட்டமைப்புகளின் அனைத்துச் செயற்பாட்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எந்த நிகழ்வாக இருந்தாலும் இறுதிக்கணம் வரை அர்ப்பணிப்போடு பணியாற்றி வந்தவர். தாய்த் தேசத்திற்காகவும், மனிதநேயப் பணிக்காகவும் பொருளாதாரப் பங்களிப்பைப் பெறுவதற்கு காலம் நேரம் பாராது மக்களின் கதவை தட்டியபோதெல்லாம்; இவருக்காக பல வீடுகளின் கதவையும், அவர்கள் மனதையும் திறக்கச் செய்தவர்.
இவரின் பிரிவு எமது மக்களின் மனதை எவ்வாறு துயரப்பட வைத்திருக்கின்றது என்பதை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் உன்னத நண்பனாகவும், அவர்களுடன் இணைந்து பல அர்ப்பணிப்பு மிக்க பணிகளை ஆற்றியிருந்தார். பல்வேறு குடும்பச்சூழலிலும் மனம் தளராது செயற்பட்டவர். கிளைக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நெருக்கடிகள் ஏற்பட்ட போது குடும்பத்திலும், ஏனையவர்களாலும் இடையூறுகள் தடைகள் இவருக்கு வந்தபோதும் அவர்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி எந்தக் காலத்திலும்; தடம் பிறழாது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்குப் பலமாக நின்றவர். தனக்கு பணிதருபவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அதைப்பற்றி சிந்தியாது கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்து வந்தவர்.
‘ஈழமுரசு’ பத்திரிகை, ‘ரிரிஎன்’ தொலைக்காட்சி என்பவற்றை ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் கொண்டு வர உழைத்தவர். தொலைக்காட்சி தடைப்பட்டபோது இனியும் அதை கொண்டு வரவேண்டும் என்று கடும் பிரயத்தனம் கொண்டிருந்தவர். இவரின் பண்பும் பேச்சும் பலரின் மனதில் இடம்பிடிக்க காரணமாய் அமைந்திருந்தது. இவரின் உருவத்தையும், உள்ளத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள் இவரை ஏளனம் செய்யும்போது அடக்கமாக ஒரு புன்சிரிப்பை மாத்திரம் உதிர்ப்பது இவரின் பண்பையும் நல்மனதையும் கண்ணியத்தையும் எடுத்துக் காட்டியிருந்தது. எல்லோரோடும் அன்பைக்காட்டி விட்டுக்கொடுப்புடன் நடந்தவர் . எமது குழந்தைகளின் தமிழ்க்கல்வியிலும் அக்கறை கொண்டதுடன் செல் மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவப்பாடுபட்டவர். இன்று அச்சங்கம் 170 வரையான மாணவர்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 77 மாவட்டம், 91 மாவட்டங்களில் தமிழ்ச்சங்கங்களும் தமிழ்ச்சோலைகளும் உருவாவதற்கும் நல்ல ஆளுமைகொண்ட தேசப்பற்று மிக்கவர்களை இனங்கண்டு அடையாளப்படுத்தியவர் .
இவர் தனது காலத்தில் தேச விடுதலைக்காக ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கும், மிகப்பெரிய மதிப்புக்கும் உரியவை என்பதை அனைவரும் அறிவார்கள். அதனால் உன்னதமான விடுதலைக்கான பணியை இவர் ஆற்றியதால் ‘ நாட்டுப்பற்றாளர் ” என்ற உயரிய மதிப்பை இவருக்கு 21.03.2019 இல் நாம் வழங்குகின்றோம்.
பொறுப்பாளர்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
‘ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ”