மொசாம்பிக் , சிம்பாப்வே ஆகிய நாடுகளில் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
மலாவி , சிம்பாப்வே மற்றும் மொசாம்பிக் ஆகிய மூன்று தென்னாபிரிக்க நாடுகளிலும் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா . தெரிவித்துள்ளது.
இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காணாமற்போயுள்ளதாகவும் பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள பகுதிகளில் வீதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மொசாம்பிக்கை தாக்கிய இடாய் புயலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அந்நாட்டு ஜனாதிபதி ஃபிலிப்பே நியுசி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மணித்தியாலத்திற்கு 177 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மக்களுக்கான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் கூரைகளிலும் மரங்களிலும் தரித்துள்ளதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.