ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஆணையாளருடனான கேள்வி பதில் அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கேள்வி –
செப்டம்பர் 2015 இல் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை (OISL அறிக்கை) வெளியானபோது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை கட்டமைப்பு ரீதியான சீர்குலைவு மற்றும் கட்மைப்பு ரீதியான ஊழல் காரணமாக எந்தவொரு உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையும் போதுமானதாக அமைந்திராது என்பது அவ்வறிக்கையின் முக்கிய முடிவுகளில் ஒன்றாக அமைந்திருந்தது. இந்த பின்னணியிலேயே அந்நாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளக பொறுப்புக்கூறலை விடுத்து கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றை நிறுவ வேண்டும் என பரிந்துரை செய்திருந்தார்.
மேலும், இலங்கை அரசானது வெறுமனே கடமைக்காவே ஐ. நா மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறதே தவிர, பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என மார்ச் 2018 இல் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வின் போது மனித உரிமைகளை ஆணையாளர் அலுவலகம் அளித்த வாய்மூல விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், இலங்கையில் குற்றவியல் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நியாயாதிக்கம் உட்பட்ட ‘மாற்று வழிகளை’ உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், இந்த அமர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கும் இதே வேளை, குற்றவியல் பொறுப்புக்கூறலை கோரி போராடி வரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இலங்கையின் பிரதமர் அக்குற்றங்களை மன்னித்து மறந்துவிடுமாறு வெளிப்படையாகக் கோரியுள்ளார். இலங்கை அரசின் உயர் மட்ட தலைவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஒருமனதாக நிராகரித்து வரும் நிலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இந்த அடிப்படை அபிலாசையை நிறைவேற்ற முடியாது என தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுவதன் மூலம் அல்லது இலங்கைக்கான விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குற்றவியல் நீதியை நிலை நாட்டலாம் என்பதை ஆணையாளர் ஏற்றுக் கொள்வாரா?