
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணோருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.
இந் நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை.
சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று அவதானித்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை.
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டின் அறையினை சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒர் அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணை வீடு முழூவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப்பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.