தமிழீழ தேச விடுதலைக்காகக் கடந்த முப்பது ஆண்டுகளாக பிரெஞ்சு மண்ணில் அயராது உழைத்த ஒரு மாமனிதனை தமிழீழ தேசம் இழந்து விட்டது.
பவுஸ்ரின் ஒரு அற்புதமான மனிதன். இருபத்து நான்கு மணிநேரமும் தமிழீழ தேசத்தைப் பற்றியும், தமிழீழ மக்களின் விடுதலை பற்றியும் சிந்தித்த ஒரு மகத்தான மனிதன். தமிழீழ மண்ணிற்காக, தமிழீழ மக்களுக்காகத் தனது வாழ்நாளின் மூன்று தசாப்தங்களை அர்ப்பணித்தவன்.
தேச விடுதலைக்காக நிதி தேடி பிரெஞ்சு மண்ணில் அவனது கால்தடங்கள் பதியாத வீதிகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அயராது உழைத்த தேசத்தின் புதல்வன் அவன்.
ஒரு தடவை அவன் சிறுகச் சிறுக மக்களிடம் சேகரித்த பணத்தை திருடன் ஒருவன் பறித்துச் சென்ற பொழுது, அந்தத் திருடனை விரட்டிச் சென்று, அவனை நையப்புடைத்து, அவனிடமிருந்து மக்களின் பணத்தை மீட்டு வந்து பணிமனையில் ஒப்படைத்த வீரன் பவுஸ்ரின்.
முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பின்னர் பலர் சோர்ந்து, துவண்டு ஒதுங்கிய பொழுது, தனது மனதைப் பிழிந்தெடுத்த ஆற்றுப்படுத்த முடியாத துயரையும் ஒருபக்கம் தள்ளி வைத்து விட்டு, தேச சுதந்திர இயக்கத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றிய உன்னத செயற்பாட்டாளன் பவுஸ்ரின்.
இந்த மாமனிதன் ஈழமுரசு பத்திரிகைக்கும், அதன் தாய் நிறுவனமாகிய ஊடக மையத்திற்கும் புதியவன் அல்ல. ஈழமுரசு ஆரம்பம் தொடக்கம் மாமனிதன் பவுஸ்ரின் சாவடையும் வரை அதன் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவன். அந்த வகையில் அவனது மறைவால் துவண்டு நிற்கும் அவனது குடும்பத்தினரதும், சக தேசிய செயற்பாட்டாளர்களதும் ஆறாத் துயரில் ஊடக மையமும் பங்கேற்கின்றது.
மாமனிதன் பவுஸ்ரின் வழிநின்று தேச விடுதலைக்காகத் தொடர்ந்து நாம் உழைப்பதே அவனுக்கும், அவன் போன்று எம்மை விட்டு மறைந்து போன தேசப் புதல்வர்களுக்கும் நாம் ஆற்றும் வரலாற்றுப் பணியாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ஊடக மையம்