
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை பற்றி சிறிலங்கா அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடுபற்றி உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற், அறிக்கையின் ஊடாக பிரஸ்தாபித்திருந்தார்.
இந்த மூன்று துறைகளிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உயர்ஸ்தானிகர் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி, சிறிலங்கா பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வெளியுறவுச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்ற ஜென்ரல் ஏநெறின்புள்ளே ஆகியோர் ஜெனீவா சென்றிருக்கின்றார்கள்.
அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைபற்றி பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் பேரவையில் தீர்மானம் சமர்ப்பித்திருந்தன. இதற்கு அமைய குறித்த விடயங்களை அமுலாக்குவதற்கு இரண்டு வருடகால அவகாசம் கோரும் யோசனையை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்போவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகிறது.