சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அத்துடன் அவர்களினால் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுன்னாகம் பிரதே சத்துக் கிணறுகளில் 73 சதவீதமான கிணறுகளில் கழிவு ஒயில் மாசு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் படிந்துள்ளதா என்பதை ஆராய்வதற்குத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
150 கிணறுகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவற்றில் 109 கிணறுகளில் (73 வீதம்), நியம அளவுக்கு அதிகமான எண்ணெயும், கிறீசும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
7 கிணறுகளில் (4 வீதம்) எண்ணெய் கலப்பு தரநியமங்களுக்கு குறைவாக உள்ளது. 34 கிணறுகளில் (23 வீதம்) எந்தக் கலப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணெய்ப் படிம மாசு ஏனைய கிணறுகளுக்கும் பரவி வருகின்றன.
மேற்படி சுன்னாகம் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிறுவனத்தைச் சுற்றியுள்ள 2.5 கிலோ மீற்றர் பிரதேசங்களில் இந்த பாதிப்பு உள்ளது. இதனால், மக்களுக்கு தினமும் ஆறு நீர்த்தாங்கிகளின் மூலம், குடும்பமொன்றுக்கு 250 லீற்றர் நீரை வழங்கி வருகின்றோம்.
இதற்கான செலவை நாம் அந்த மின்சார நிறுவனத்திடமே பெற வேண்டியுள்ளது. அவர்களால் தான் இந்தப் பிரச்சினை உருவானது. இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் – கிறீஸ் படிமங்கள் இருப்பதனால் மக்கள் அந்தக் கிணற்று நீரை அருந்தக் கூடாது. அத்துடன் நாம் எமது ஆய்வுகளை இன்னும் விரிவுபடுத்தியுள்ளோம். அந்தப் பகுதிகளிலுள்ள சகல கிணறுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இதற்காக மக்களிடமிருந்து பணம் எதுவும் அறவிடுவதில்லையெனவும் தீர்மானித்துள்ளோம் – என்று அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 85 சதவீதமான கிணறுகளில் எந்தக் கழிவு ஒயில் பாதிப்பும் இல்லை என்று அறிக்கை வழங்கப்பட்டது.
இன்னமும், 400 கிணறுகள் வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவற்றை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடிதண்ணீர் விநியோகம் இடர்முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இதேவேளை, வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவிக்கையில், மக்களது கிணறுகளில் மாசு தொடர்பில் பரிசோதிப்பதற்கு எம்மிடம் ஆயிரத்து நூறு ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அறவிடப்பட்டது என்று தெரிவித்தார்.