நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது!

0
1055

தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தை சின்னத்துரை கமலநாதன் அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகும்.

திரு கமலநாதன் அவர்கள் 13.03.2019 புதன் அன்று காலை அவர்வாழும் யேர்மனி நாட்டில் சாவடைந்துள்ளார். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் செயற்பாடுகளில் தன்னை முழுமையாகவே இணைத்துப் புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்லாயிரம் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்வியை இலகுவாக்கிப் பயிலவைத்ததில் இவரின் பங்கு அளப்பரியது. இவர் தொடக்க காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் முதன்மையாளராக இருந்து செயற்பட்டவர். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பில் இணைந்துள்ள நாடுகளுக்குச் சென்று ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை மிகத் திறம்பட நடாத்தி பல ஆசிரியர்களை உருவாக்கியவர். அன்று தொட்டு இன்றுவரை நடாத்தப்படும் அனைத்துலகப் பொதுத் தேர்வின் மூலகர்த்தாவும் இவரேயாவார். மழலையர் நிலை தொடக்கம் வளர்தமிழ்: 12 வரையான நூல்கள் இவரால் ஆக்கப்பட்டவை. அவை மட்டுமல்லாமல் இவரால் ஆக்கப்பட்ட இலக்கியமாணி பட்டப் படிப்புக்கான நூல்களுள் ‘நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் இலக்கிய வரலாற்று நூல் இவரின் சிறந்த படைப்புக்களில் முதன்மையானது. பல சான்றோர்களின் பாராட்டைப் பெற்றதுடன் இவரால் உருவாக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் மனதையும் கவர்ந்த நூலாகும். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் 2018 நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருமை இவரையே சாரும். தேசியத்தின் மீது அளவு கடந்த பற்றுக்கொண்ட இவர் இறுதிக்காலம் வரை தமிழ்ப்பணியாற்றி, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்குப் பெருமை தேடித்தந்த இவரின் பிரிவானது அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல தமிழுலகுக்கே பேரிழப்பாகும். இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் அனைவருடனும் பேரவைக் குடும்பமும் ஆழ்ந்த துயரைப் பகிர்ந்துகொள்கின்றது.

தமிழே எங்கள் உயிர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here