லெப்.கேணல் ஜொனி அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று!

0
1106

லெப்.கேணல் ஜொனி அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

ஜொனி மிதிவெடிபற்றி அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல் எனவே பார்க்கப் படுகின்றது.

ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.

இந்த மிதிவெடியை உருவாக்கியபோது புலிகளமைப்பில் 400 இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களில் இருந்து “ஜொனி” என்ற பெயரை தலைவர் ஏன் தெரிவு செய்தார்? 

இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.

லெப். கேணல் ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழகப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்ட வாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது. 

இந்த நேரத்தில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது. இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர். 

இந்தப் பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர். அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலித் தாக்குதலும் அடங்கும். 

இந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார். 

ஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் ஆறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர். 

இன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். 

இந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன். 

ஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற “ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்” (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ்303துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன. 

சரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை. புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது. 

இந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கோடு தான் போட்டது. அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும். 

ஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார்.    

1980களில் யாழ். குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது.

கிட்டண்ணையால்  சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார். 

இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார். 

இந்திய இராணுவத்தினர் தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய TELO, EPRALF, ENDELF போன்ற சமூக வீரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது. 

அப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர். 

இதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர். 

ஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது. 

சில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது. 

அதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார். 

இவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர். 

இந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர். அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும். 

அதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவ புலிகளும் ஆயத்தமாகினர். 

அதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர்  அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர். 

இந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும். 

ஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடிக்குடுத்து (றிலே) போடுவதுபோல் அது இருக்கும். 

ஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு ஜோகியண்ணையையும் அவர்க்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார். அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார். 

தலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்.  

தலைவரிடம் வந்தபின் தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது. 

அவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும்  திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார். 

இதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.! 

அதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்கியிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர். 

இதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர்.

ஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் “செக்மேட்” என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார். 

அப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 

இதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும்,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார். 

ஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்க கட்டளை இட்டார். 

அதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. 

பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.

இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்)

இதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது. 

அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.? 

இது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.! 

ஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர். 

அந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.! 

அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.! 

அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். 

அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். 

எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.! 

மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர். 

இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது. 

தனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. 

ஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.! 

இராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம்,போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும். 

அன்று இந்த ஜொனி மிதிவெடியினால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி,எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது.

தாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது.

வரலாற்றுடன் துரோணர்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here