இலங்கையில் நிலவும் கொடிய வெப்பத்திலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு மேல் மாகாண ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
அதிக வெப்பநிலையால் ஏற்படும் சுகாதார சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அசாதாரண வெப்பநிலைக்கு முன்னராகவே 90%மான பாடசாலைகள் தம்முடைய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளை முடித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின் படி மாத்தளை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, மாத்தறை, அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப நிலையுடன் கூடிய காலநிலை நிலவும்.
வேலைத்தளங்களில் தொழில் புரிவோர் முடிந்தவரை நிழலில் வேலை புரியுமாறும், நீரிழப்பிலிருந்து பாதுகாப்புடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் இது தொடர்பாக கூடுதல் முன்னெச்சரிக்கையுடனும், தேவையற்ற விதமாக வெயிலில் நடமாடாது இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.