பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். பாசமுள்ள சகோதரியாகவும், நேசம் காட்டும் தோழியாகவும், அன்பைப் பொழியும் அம்மாவாகவும், ஆறுதல் தரும் பாட்டியாகவும் பெண்கள் நம்முடன் வலம் வருகிறார்கள். எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். பெண்களின் பெருமையை போற்றுவதற்காக மார்ச்-8 (இன்று) பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் பெண்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும், முன்னோடி பெண் மணிகளையும் தெரிந்து கொள்வோமா…!
சுவாரஸ்ய ஆய்வுகள்
பேசுவதில் கில்லாடிகள் : பெண்கள் பேசுவதில் கில்லாடிகள். ஆண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7 ஆயிரம் வார்த்தைகள் பேசுவார்களாம். ஆனால் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறார்களாம். இது ஆண்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 3 மடங்கு அதிகமாகும்.
வியர்வை அலங்காரம் : பழமையான ரோம் கலாச்சாரத்தில் பெண்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. போர் வீரர்களின் உடலில் இருந்து வழியும் வியர்வையை சேகரித்து தங்கள் சருமத்தில் பூசி அழகுபடுத்திக் கொள்ளும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. போர்வீரனின் ஆடையையும் உயர்வாக போற்றி பெண்கள் அணிந்து மகிழ்வது உண்டு.
தாய்மையில் சாதனை : உலகில் ஒரு பெண் 69 குழந்தையை பெற்றெடுத்ததே உலக சாதனையாக உள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த வியோடர் வாஸ்சில்யேவ் என்ற பெண்மணி, 27 முறை கர்ப்பம் தரித்து, 69 குழந்தைகளின் தாயார் என்ற சாதனையை பெற்றார். இதில் 16 இரட்டைக் குழந்தைகள், 7 முறை மூன்று குழந்தைகள், 3 முறை 4 குழந்தைகளை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.
சுவையும்- நிறமும் : பெண்களுக்கு ஆண்களைவிட சுவை அறியும் திறன் அதிகம். அதேபோல பெண்களுக்கு நிறம் அறியும் திறனும் அதிகம். இதிலும் குறிப்பிட்ட விதமான மரபணுக்கள் அமைந்தவர்களால் மற்றவர்களைவிட பல லட்சம் நிற வித்தியாசங்களை இனம் காணக்கூடியதாக அமைந்திருக்கிறதாம். உதாரணமாக சாம்பல் பழுப்பில் உள்ள 50 விதமான வண்ண பேதங்களை ஆண்களைவிட பெண்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
ஆடைகளுக்கு ஒரு ஆண்டு : பெண்கள் ஆடை விஷயங்களில் ரொம்பவே கவனம் செலுத்துவார்கள். அவர்கள் எந்த உடையை தேர்வு செய்து அணிவது என்று முடிவு செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேர அளவை வைத்து ஒரு வினோத ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை இந்த ஆடை அணியும் சிந்தனைக்கு செலவிடுவதாக மதிப்பிட்டு கூறியது அந்த ஆய்வு.
நோய் தாக்குதல் : குமட்டல், தோள்பட்டை வலி, அஜீரணம் போன்றவை பெண்களை அதிகமாக தாக்கும் பாதிப்புகளாகும். பெண்களை அதிகமாக உயிர்ப்பலி வாங்கும் நோய் மாரடைப்புதான்.
இந்திய சாதனை பெண்கள்
பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அரசியல், நிர்வாகம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைக்குரியவர்களாக மிளிர்கிறார்கள். அன்னை தெரசா, இந்திராகாந்தி, கிரண்பேடி, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், பிரதீபா பட்டீல் என்று சாதனைப் பெண்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தற்கால பெண்களும் இவர்களுக்கு சளைப்பில்லாமல் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். அவர்களில் சிலரையும் பார்க்கலாம்…
கால்களை விபத்தில் இழந்த பின்பு, தன்னம்பிக்கையுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த இந்திய பெண்மணி அருணிமா சின்கா.
மேரிகோமின் குத்துச்சண்டை சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 5 முறை உலக சாம்பியன் வென்ற பெருமைக்குரியவர். ஒலிம்பிக்கில் முதன் முதலாக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் சாய்னா நெய்வால். உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனிலும் இவர் சாம்பியனாகி இருக்கிறார். மேலும் பல போட்டிகளிலும் சாதனைகள் படைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீராங்கனை ஹர்சினி கேன்கேகர்.
ராஸ்மி பன்சால் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். 5 புகழ் பெற்ற புத்தகங்களை எழுதி உள்ளார். ‘ஸ்டே ஹங்ரி ஸ்டே பூலிஷ்’ என்ற இவரது புத்தகம் உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், பல மொழிகளில் மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் சிறந்த பெண்மணிகள்
ஜெர்மனியைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கரோலின் ஹெர்சல். இவர் 1750-ம் ஆண்டு மார்ச் 16-ந்தேதி பிறந்தார். இவர் தனது வால்நட்சத்திர கண்டுபிடிப்புக்காக போற்றப்படுகிறார். முதன் முதலில் பெண்விஞ்ஞானியாக இதை சாதித்த அவருக்கு, புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கழகமான ராயல் சொசைட்டியில் அங்கத்தினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
உலகப் புகழ்மிக்க பெண் விஞ்ஞானியான மேரி கியூரி போலந்து நாட்டுக்காரர் ஆவார். 1867-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி அவர் பிறந்தார். நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை இவரைச் சாரும். அதே நேரத்தில் மீண்டும் நோபல் பரிசு பெற்று இருமுறை நோபல் வென்ற அரிய சாதனையையும் படைத்தார். கதிரியக்கத்தன்மை இவரது சிறந்த கண்டுபிடிப்பாகும். 1910-ல் இவர் தூய ரேடியத்தை உற்பத்தி செய்து காண்பித்தார். இவர் 1934-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி மரணம் அடைந்தார்.
கியூரியின் மகளான இரேனி ஜூலியட் கியூரி, செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கியதற்காக உலகப்புகழ் பெற்றார். வேதியல் துறையில் நோபல் பரிசும் வென்றார்.
ரீட்டா லெவி இத்தாலியின் நரம்பியல் நிபுணர். 1909-ல் பிறந்த இவர், 1986-ல் நரம்பு வளர்ச்சி காரணி பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். நூறுவயது வாழ்ந்த நோபல் வெற்றியாளர் என்ற பெருமையுடன் வாழ்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி மரணம் அடைந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ரோசலிண்ட் பிராங்கிளின். இவர் டி.என்.ஏ.வின். வடிவத்தை கண்டுபிடித்ததுடன், அதை எக்ஸ்ரே படம் பிடிக்கும் முறையையும் உருவாக்கி யவர் என்ற பெருமைக்குரியவர்.
இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு புகழ்மிக்க ஆய்வாளர் ஜானி கூட்ஆல். சிம்பன்சி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக புகழப்படும் பெண் ஆய்வாளர். தான்சானியா தேசிய பூங்கா ஒன்றில் ஆராய்ச்சி செய்த அவர் சிம்பன்சிகளின் பழக்கவழக்கங்கள் மனிதர்களோடு எவ்வளவு ஒத்துப்போகின்றன என்பதை தனது ஆய்வின் மூலம் உலகறியச் செய்தார்.
உலகின் முதல் கணினி நிரல் எழுதுனர் (புரோகிராமர்) பெண்தான். அடா லாவ்லேஸ் என்ற பெண்மணிதான் கணினியின் முதல் நிரலை எழுதினார்.
இவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தில் இருக்கும் நம் சகோதரிகளும், தாய்மார்களும் அன்பாலும், பண்பாலும் நமக்கு முன்னோடிகளே. நாம் அவர்களை போற்றுவோம்
(நன்றி: மாலைமலர்)