பிரான்சில் பேரெழுச்சிகொண்ட வன்னிமயில் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

0
629

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 10 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2019 நடன நிறைவு நாள் போட்டிகள் மிகவும் பேரெழுச்சியாக கடந்த 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று முடிந்தது. முதல் மூன்றுநாள் நிகழ்வுகள் கடந்த பெப்ரவரி 23 ஆம், 24 ஆம் மற்றும் 25 ஆம் நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமினில் பகுதியிலும் நான்காம் நாள் நிகழ்வு 02.03.2019 சனிக்கிழமை திரான்சிப் பகுதியிலும் வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்த நிலையில் நிறைவுநாள் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. ஐந்து தினங்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. 02.03.2019 சனிக்கிழமை நிகழ்வில் 1998 ஆம் ஆண்டு நாகர்கோவில் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன் சின்னவீரனின் சகோதரர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியில் பிரமாண்டமான அரங்கில் நிறைவுநாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. ஆரம்ப நிகழ்வாக இன்னியம் அணிவகுப்பு மரியாதையோடு பிரமுகர்கள் மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து 18.06.1998 அன்று கரிப்பட்டைமுறிப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை ஒளியவனின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து கடந்துவந்த வன்னிமயில் நிகழ்வுகள் தொடர்பான காணொளித் தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டன. ஜேர்மனி மண்ணிலே 5 வருடங்களாக நடனக் கல்லூரியை நடாத்திவரும் கலாஜோதி கலாவித்தகர் திருவாட்டி சரண்யா தங்கரட்ணம்; அவர்கள். சிறீமதி சுரேஸ் அனுஷா , யாழ். பல்கலைக்கழக நுண்கலைமாணி பட்டம் பெற்றவர், வட இலங்கை சங்கீதசபை கலா வித்தகர், யாழ். உடுவில் மகளிர்கல்லூரி நடனஆசிரியர், பிரான்சு அபிநாலயம் நடன ஆசிரியர் அவர்கள். மட்டக்களப்பு விபுலாநந்தா இசைநடனக்கல்லூரியில் கல்விகற்று நுண்கலைமாணி பரதக்கலைமாணி நாட்டியமயில் வவுனியா மகாவித்தியாலய நடன ஆசிரியர், பிரான்சு ஆர்ஜொந்தையில் நடன ஆசிரியர் திருவாட்டி லிங்கபாபு பாமினி அவர்கள் சுவிஸ் மண்ணில் இருந்து வருகைதந்த சுமார் 31 ஆண்டுகளுக்கு மேலாக பல ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கி வரும் முதுகலைமாணி திருக்கோடீஸ்வரா நடனாலய இயக்குநர் திருவாட்டி மதிவதனி சுதாகர் அவர்கள், சுமார் 28 வருடங்களுக்கு மேலாக நடன இயக்குநராகப் பணியாற்றும் காலைக்கோவில் ஆடற்கலையகத்தை சுவிஸ் மண்ணில் நடாத்திவரும் முதுகலைமாணி திருவாட்டி நிமலினி ஜெயக்குமார் அவர்கள், 31 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி பல ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கியவர் கலாநிகேத நடனாலய இயக்குநர் நிருத்யவித்யாரத்னா இளங்கலைமாணி திருவாட்டி கிருஸ்ணபவானி சிறீதரன் அவர்கள். ஆகியோர் இறுதி இரண்டு நாட்களும் நடுவர்களாகக் கடமையாற்றியிருந்தனர். தொடர்ந்து நடுவர்கள் அரங்கிற்கு அழைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு, நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் திருமதி சுகந்தினி சுபாஸ்கரன் அவர்களால் வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின. தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மேலும் தமது கரகோசத்தால் போட்டியாளர்களையும் நடுவர்களையும் உற்சாகமூட்டிக்கொண்டிருந்தனர். சிறப்பு நிகழ்வாக ‘வன்னிமயில்” நிகழ்வு 10 ஆவது அகவையை எட்டியதையொட்டிய சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிறப்பு மலரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் வெளியிட்டுவைக்க முதற் பிரதியை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீட முன்னாள் பீடாதிபதியும் இன்னியம் நடனக் கலையை அறிமுகம் செய்தவருமான திரு.பாலசுகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப்பிரதியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள், தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் ஆகியோர் பெற்றுக்கொண்டதையடுத்து, மலருக்காக அனுசரணை வழங்கியவர்களுக்கு மலரோடு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வன்னிமயில் 10ஆம் அகவையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பாடலை பாடகிகள் பாட அந்தப்பாடலுக்கு கடந்துவந்த காலங்களில் உருவாக்கப்பட்ட வன்னிமயில்கள் ஒரேமேடையில் ஒன்றுகூடி தோகை விரித்து ஆடிய காட்சி காண்பவர்களைக் கொள்ளைகொண்டது. தொடர்ந்து குறித்த பாடல் உருவாகுவதற்குக் காரணமான கலைஞர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர். சிறப்புரையினை தமிழீழ மக்கள் பேரவைப் பேச்சாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், தமிழ் பெண்கள் அமைப்பினரின் இந்த நிகழ்வில் இருந்து கிடைக்கும் நிதியானது முழுமுழுக்கத் தாயகத்தின் வாழ்வாதாரத்துக்கே அனுப்பிவைக்கப்படுதைத் தெரிவித்த அவர், அடுத்து வரும் வன்னிமயில் நிகழ்வுகளில் ஆயிரம் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுக்கவேண்டும் எனவும் வாழ்த்தியிருந்தார். அவர் நடுவர்களுக்கும் நன்றியறிதலைத் தெரிவிக்கத் தவறவில்லை. தொடர்ந்து நன்றியுரையினை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி சிவகுமாரி நித்தியானந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். அதனையடுத்து, பெண்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டு மேடையில் தேர்வுபார்க்கப்பட்டது. தொடர்ந்து நடுவர்கள், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் மதிப்பளிக்கப்பட்டனர். தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஒவ்வொரு முடிவுகளை அறிவிக்கும்போதும் மண்டபம் நிறைந்த கரகோசத்தால் வானதிர்ந்தது. 2019 ஆண்டு வன்னிமயிலாக சீராளன் திவ்வியா (அதி அதி மேற்பிரிவு -அ) (பாடல் – தாய்மண்ணை முத்தமிடவேண்டும்….) தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்ததைக் காணமுடிந்தது. அரங்கில் பிரமுகர்கள், கடந்தகால வன்னிமயில்கள், நடுவர்கள், தமிழ் பெண்கள் அமைப்பினர் என அனைவரும் புடைசூழ்ந்து நிற்க வன்னிமயில் மகுடம் சூட்டப்பட்ட காட்சி, மிக அழகாகவும் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

  • போட்டி முடிவுகள் தொடர்ச்சி….
  • அதிமேற்பிரிவு                                                                                        
  • பிரிவு (அ)                                                                                                            1 ஆம் இடம்: புஷ்கரன் அட்சயா                                                                2 ஆம் இடம்: சிவகுமாரன் சஜானி                                                           3 ஆம் இடம்: நல்லையா அதிசயா                                                  
  • பிரிவு (ஆ)                                                                                                            1 ஆம் இடம்: கோவிந்தராஜ் சௌந்தர்யா                                                                                                      2 ஆம் இடம்: கிருபாகரன் சோபியா                                                         3 ஆம் இடம்: அற்புதநாதன் ஆருசா
  • பிரிவு (இ)                                                                                                          1 ஆம் இடம்: சிமிர்னா தர்மகுலசிங்கம்                                                2 ஆம் இடம்: பத்மராஜா லோஜிகா                                                          3 ஆம் இடம்: வசந்தகுமார் லேனா
  • அதி அதி மேற்பிரிவு                                           
  • பிரிவு (அ)                                                                                                           1 ஆம் இடம்: நாகராஜன் கௌசிகா                                                         2 ஆம் இடம்: கேதீஸ்கரன் கெனிதவி                                                       3 ஆம் இடம்: கோகிலதாஸ் சூர்யா
  • பிரிவு(ஆ)                                                                                                              1 ஆம் இடம்: அற்புதநாதன் அபர்ணா                                                     2 ஆம் இடம்: குமாரதாஸன் ஆதர்ஷா                                                     3 ஆம் இடம்: திருஞானசுந்தரம் ஆராதனி                                             3 ஆம் இடம்: அருமைநாயகம் லிண்டா
  • சிறப்புப் பிரிவு                                                                                                  1 ஆம் இடம்: சுரேந்திரன் லாவண்யா                                                      2 ஆம் இடம்: தவராஜன் மயுந்தினி                                                           3 ஆம் இடம்: கணேசலிங்கம் நிலானி                                                   3 ஆம் இடம்: ம்பேபி கொபின்                                                     (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here