சென்னை பல்லாவரத்தில் தண்ணீர் லாரி தறிகெட்டு ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இது பற்றிய விவரம்:
சென்னை, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், சம்பந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (28), திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி பிரீத்தி (24) குழந்தை தியா (3) மாமியார் சரோஜா (64) ஆகியோருடன் பல்லாவரம் வாரச்சந்தைக்கு பைக்கில் வந்தார். அந்த மோட்டார் சைக்கிள் பல்லாவரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே, விதிமுறையை மீறி தவறான பாதையில் வேகமாக ஒரு தண்ணீர் லாரி வந்தது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தொடர்ந்து தறிகெட்டு ஓடிய அந்த லாரி, மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கான டோக்கன் வாங்கிக் கொண்டிருந்த மகேஷ் மீதும், டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த இளைஞர் மீதும் மோதியது.
இதில் மகேஷ் மனைவி பிரீத்தி தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தைக் கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
லாரி மோதி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகேஷ், மாமியார் சரோஜா, குழந்தை தியா, அடையாளம் தெரியாத இளைஞர் ஆகிய நால்வரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஷும், அடையாளம் தெரியாத இளைஞரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரோஜா, குழந்தை தியா ஆகிய இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். பரங்கிமலை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்குக் காரணமான தண்ணீர் லாரி ஓட்டுநர் சுரேஷை (34) கைது செய்தனர்.