யாழில் பொலிசாரல் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட 3 ஊடகவியலாளர்களும் இன்று வெள்ளிக் கிழமை யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நல்லூர் பிரதேசத்தில் வைத்து சிவில் உடை அணிந்த இரண்டு பேர் அடங்கிய குழுவினர் மூன்று ஊடகவியலாளர்களை, கத்தியுடன் துரத்தியுள்ளார்கள். குறித்த ஊடகவியலாளர்கள் உண்ணாவிரத செய்தி சேகரிப்புக்கு சென்று தங்கள் அலுவலகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு துரத்தப்பட்டனா்.
அவர்கள் மீது இடம்பெறவிருந்த தாக்குதலில் இருந்து தப்பி யாழ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக விரைந்து சென்றனர் அங்கு பொலிஸ் நிலைய வளாகத்தில் ஊடகவியலாளர்களை தாக்கிய குழுவினரின் முச்சக்கர வண்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்ததோடு பொலிஸ் அதிகாரி மற்றும் சார்ஜனே தாக்குதல்காரர்கள் என அவர்களுக்கு தெரியவந்தது.
பொலிஸ் நிலையத்தில் கடமை நேரத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் புகார்களை ஏற்க மறுத்துள்ளனர். தாக்குதல்தாரிகள் பொலிஸார் அணியும் சிவில் உடை அணிந்திருந்ததாகவும். அதில் ஒருவர் முகக்கவசம் அணிந்திருந்ததாக குறித்த பத்திரிகையாளார்கள் தெரிவித்துள்ளார்கள்.
அப்பத்திரிகையாளர்கள் ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் அதே பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவரே தாக்குதல்தாரியென அறிந்துள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவர்களின் புகாரை ஏற்க மறுத்துள்ளதோடு தாக்கவும் முயற்சித்ததாக ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீண்ட வாக்குவாதங்களுக்கு பின்னர் அடுத்த நாளில் அப்புகாரை பொலிஸார் ஏற்றுக்கொண்டதுடன் அதிலும் ஒரு சில குற்றங்களையே பதிவு செய்தனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். இறுதியாக இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் இரு பொலிஸ்காரர்கள் இருந்துள்ளனர் என பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும் பொலிஸார் கத்தியை, தங்கள் பாதுகாப்பிற்காகவே வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை மூன்று ஊடகவியலாளர்களும், பொலிஸாரை தாக்க முயற்சித்ததாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் குறித்த பொலிஸ் குழுவிற்கு எதிரான வழக்கை கைவிடவிரும்பவில்லை, அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட 3 ஊடகவியலாளர்களும் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.